Flash News

போர் வந்தால் 20 நாள் கூட இந்தியாவால் தாக்குபிடிக்க முடியாது- CAG பரபரப்பு ரிப்போர்ட்

இந்திய ராணுவத்தில் கடும் ஆயுத தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், திடீரென போர் வந்தால் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது என சி.ஏ.ஜி. கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) விடுத்துள்ள அறிக்கையில், ”தற்போது ராணுவத்தில் உள்ள வெடிபொருட்களை வைத்து 15 முதல் 20 நாட்கள் வரை மட்டுமே போரிட முடியும். 170 வகையான வெடிமருந்துகளில் 125 வகை வெடிமருந்துகள் 20 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. 50 சதவீத வெடிமருந்துகள் 10 நாட்களுக்கு மட்டுமே உள்ளன. 40 நாட்களுக்கு தேவையான வெடிமருந்துகளை மட்டுமே இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை முடிவை மாற்ற வேண்டும்.

மேலும், இந்திய விமானப்படையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பயிற்சியின் போது ஏற்படும் விபத்துக்கள், பழைய விமானங்களுக்கான உதிரிபாகங்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விமானங்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.

அதேபோல், 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேஜாஸ் விமானம் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விமானமும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகளின் குறைவான உற்பத்தி திறன் காரணமாக ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இறக்குமதி நடவடிக்கைகளும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. 2013 ஜூலையில் விடப்பட்ட டெண்டர் 2014 டிசம்பர் வரை இறுதி செய்யப்படவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”இந்தியா பாதுகாப்பாகவே உள்ளது. இனியும் பாதுகாப்பாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.