ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில், கடன் தொகை தவறாக மதிப்பிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த அடிப்படையில், கோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட்டில் இடைக்கால தடை வாங்க தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக அரசு வக்கீல் ஆச்சாரியா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் நீதிபதியே குறிப்பிட்ட கடன் தொகையை கூட்டி பார்த்தால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய் தான் வரும். ஆனால் நீதிபதியோ, இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையில் தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்கு தொடுத்தது தவறு என்றும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில்தான் வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா 8.12 சதவீதம் மதிப்புக்கு மட்டுமே சொத்து சேர்த்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், உண்மையான கடன் தொகையை வைத்து கணக்கிட்டு பார்த்தால் வருமானத்தைவிட 76.75 சதவீதம் அளவுக்கு கூடுதலாக சொத்து சேர்த்துள்ளது தெரியவருகிறது. இந்நிலையில்தான், நீதிபதி தனது தீர்ப்பின் மையப்புள்ளியாக கொடுத்த அந்த 8.12 சதவீத பாயிண்ட்டில் தவறு உள்ளதை எதிர்க்கட்சிகளும், சட்ட வல்லுநர்களும் கண்டுபிடித்துள்ளனர். எனவே, ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டால், இந்த ஓட்டை பெரும் பின்னடைவை ஜெயலலிதா தரப்புக்கு ஏற்படுத்தும். கீழ்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா இதையெல்லாம் பரிசீலித்து கூட்டி கழித்து கணக்கு சரியாக போட்டுள்ளதையும், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்தரப்பு எடுத்து வைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், அரசு வக்கீல் ஆச்சாரியா கூறுகையில், “கூட்டல் கணக்கில் பிழை உள்ளது. எனவே, ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தால் அப்போது, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை விடுக்க தீவிரமாக பரிசீலிக்கப்படும். அப்போது இந்த பாயிண்ட் மிகவும் உதவும்” என்றார். ஹைகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்தால், ஜெயலலிதாவால் முதல்வராக பதவி வகிக்க முடியாத சட்ட சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.