News தற்போதைய செய்தி

முதல்வரின் திட்டமிட்ட முன்னேற்பாடு.. தயார் நிலையில் மீட்பு குழு- எவ்வளவு மழை பெய்தாலும் மக்களை காப்போம்: வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து, மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர்.

தமிழக முதல்வரின் திட்டமிட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கையால், எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் ஆபத்தில் சிக் காதவாறு சென்னை மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

தமிழகத்தில் மழைக்காலத்தில் 4,499 பாதிப்பு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு 13,325 முதல்நிலை மீட்பர்கள், 4,399 முதல்நிலை மீட்புக்குழு, 6,740 பெண்கள் உள்ளனர். ஒரு லட்சம் போலீஸாரும் இப்பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 22,538 நீர்நிலைகளில் 12,070 கி.மீ. ஆற்றுப்பாதை தூர்வாரப்பட்டுள்ளது. 7,030 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 1,37,836 பாலங்களில் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அணைகள் நிரம்பினால் நீரைத் திறக்க முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுவதில் உரிய வழிமுறைகள் வழங்கப் பட்டுள்ளன.

முழுமையான தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன.

சென்னையில் உள்ள 15 மண்டலத்துக்கும் தலா 2 அமைச்சர்கள், பல ஐஏஎஸ் அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறையினர், அதிகாரிகளையும் 24 மணி நேர நவீன கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைக்கிறது.

உயர் அழுத்த ஜெனரேட்டர்கள், மோட்டார்கள், மீட்பு படகுகள், 1,500 பேரை தங்கவைக்கும் அளவுக்கு 176 நிவாரண முகாம்கள், 44 மருத்துவக் குழுக்கள், 4 பொது சமையல் கூடங்கள், பேரிடர் சிறப்பு பயிற்சி பெற்ற 2,500 போலீஸார் உள்ளிட்ட ஏற்பாடுகள் மண்டலம் வாரியாக 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தண்ணீரில் மிதந்து சென்று அடைப்புகளை நீக்கும் ‘ஆம்ப்ரியன்’ என்ற நவீன இயந்திரம், ஆழத்துக்குச் சென்று நீர்வழிப்பாதையை சரிசெய்யும் ரோபோட் இயந்திரம் ஆகியவை மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதன் மூலம் 5,753 இடங்களில் தூர்வாரி, 4,388 டன் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வளவு வெள்ளம், கடலூரில் தொடர்ந்து கனமழை பெய்தபோதும் பாதிப்புகள் இல்லாததற்கு முதல்வர் வகுத்து தந்த திட்டமிட்ட முன்னேற்பாடுகளும், தீவிரமான சீரமைப்பு பணிகளும்தான் காரணம்.

எவ்வளவு பெருமழையானாலும் சமாளிக்கவும், பாதுகாக்கவும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தயாராக உள்ளது என்றார்.