Cinema Entertainment Flash News

விஜய்-அஜீத் படங்களுக்கு ஆப்பு வைக்கும் எஸ்.தாணு

கோலிவுட்டில் தற்போது சராசரியாக வாரத்திற்கு நான்கு திரைபப்டங்கள் என்ற அளவில் ரிலீஸாகி வருகிறது. இவற்றில் பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறிய பட்ஜெட் படங்களுடன் பெரிய பட்ஜெட் அல்லது பெரிய ஸ்டார் படங்கள் மோதினால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அப்படியே கஷ்டப்பட்டு தியேட்டர் கிடைத்தாலும், பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டி போட முடிவதில்லை.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிரமாக கடந்த சில மாதங்களாக ஆலோசித்து வந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட கலைப்புலி எஸ்.தாணு, பெரிய பட்ஜெட் படங்கள் ஒருசில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே ரிலீஸாக வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வர முடிவு செய்தார். அதன்படி அவர் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகும் நாட்களை குறிப்பிட்டுள்ளார்.

ரூ.15 கோடி மற்றும் அதற்கும் மேல் அதிக பொருட்செலவில் தயாராகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள், பொங்கல், குடியரசு தினம், தமிழ்ப்புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பத்து நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும், 15 கோடிக்கு கீழ் தயாரிக்கப்படும் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள் வருடத்தின் எந்த நாட்களிலும்ம் விருப்பம்போல் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்றும் இந்த நடைமுறை வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறுகிறார்.

தாணுவின் இந்த அறிக்கையால் இனிமேல் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற பெரிய ஸ்டார்களின் படங்கள் மேற்கண்ட பத்து நாட்களில் மட்டும் ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.