National News

ஷீனா போராவை பீட்டர் முகர்ஜியே கொலை செய்து இருக்கலாம்: இந்திராணி முகர்ஜி திடுக் தகவல்

ஷீனா போராவை பீட்டர் முகர்ஜியே கொலை செய்து இருக்கலாம் என்று இந்திராணி முகர்ஜி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
மும்பை,
பேராசை காரணமாக கணவர் பீட்டர் முகர்ஜி, எனது மகள் ஷீனா போராவை கொலை செய்து ஆதாரங்களை மறைத்திருக்கலாம் என்று  இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.
பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. . இந்த வழக்கில், பீட்டர் முகர்ஜியின் முன்னாள் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராயை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர்
அப்ரூவராக மாறினார்.விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஷீனா போராவின் தாய் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தக் கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, இவ்வழக்கை விசாரித்துவரும் நீதிமன்றத்தில், புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 அதில், ஷீனா கொலையின் பின்னணியில் கணவர் பீட்டர் முகர்ஜியும், ஷியாம்வர் ராயும் இருக்கலாம். ஆதாரங்களையும் அவர்கள் திட்டமிட்டு அழித்திருக்கவும் வாய்ப்புள்ளது. என்னை இந்த வழக்கில் சிக்க வைக்கவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம். கடந்த 2012, 2015 ஆகிய ஆண்டுகள் முழுவதும் பீட்டர்  முகர்ஜியின்  மொபைல் போனுக்கு வந்த அழைப்புகள், குறுந்தகவல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.