News Story

13 குழந்தைகளை பெற்றெடுத்த 65 வயது பெண் மீண்டும் கர்ப்பம்: நான்கு குழந்தைகளை கருவில் சுமக்கும் அதிசயம்!

ஜெர்மனியின் ஸ்பான்டாவ் பகுதியில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் அன்னெகிரெக் ராவ்நிக். 10 வருடங்களுக்கு முன் தனது 55வது வயதில் 13வது குழந்தை லேலியாவை பெற்றெடுத்தபோது தலைப்பு செய்தியில் இடம்பிடித்தார். தற்போது ஒன்பது வயதை எட்டியுள்ள லேலியா தனக்கு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்று தாயிடம் கூறினார்.

 

பெற்ற மகள் ஆசைப்படுகிறாளே என நினைத்த அன்னெகிரெக், அடுத்த குழந்தையை பெற்றெடுக்க தயாரானார். இதையடுத்து கர்ப்பம் தரிப்பதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டதால் கர்ப்பமானார். சில மாதங்களுக்கு பின் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது அன்னெகிரெக் நான்கு குழந்தைகளை சுமப்பது தெரிந்தது. இதனால் மருத்துவர்களும், அன்னெகிரெக்கும் ஆச்சர்யம் அடைந்தனர். எனினும் 13 குழந்தைகளை பெற்றெடுத்த தனக்கு 4 குழந்தைகளை சுமப்பது பெரிய விஷயமல்ல என் அன்னெகிரெக் தெரிவித்தார்.
பெரும்பாலும் இவ்வாறு நான்கு குழந்தைகள் கர்ப்பம் தரித்தால், அவை குறை பிரசவத்தில் பிறக்க நேரிடும். அவ்வாறு பிறக்கும் போது குழந்தைகளின் நுரையீரல்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் தற்போது வரை நான்கு குழந்தைகளும் எவ்வித பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தனக்கு தம்பி மற்றும் தங்கை பிறக்க உள்ளதை எதிர்பார்த்து 13வது குழந்தையான லேலியா காத்திருக்கிறாள்.