கலாமின் கடைசி நிமிடங்கள்…
By ஸ்ரீஜன் பால் சிங்
அவருடன் கடைசியாக பேசி எட்டு மணி நேரம் கடந்துவிட்டது. உறக்கம் கண்களைச் சுழல வைக்க, நினைவலைகள் மேல் எழும்பின… அவை கண்ணீரலைகளாகவும் இருந்தன. 27 ஜூலை இதுதான் அவருடன் கழித்த கடைசி தினம். 12 மணிக்கு அந்தச் சந்திப்பு. கெளஹாத்தி செல்லும் விமானத்தில் இருவரும் அமர்ந்தோம். டாக்டர் கலாமின் இருக்கை எண் 1 ஏ என்னுடையது 1 சி. அவர் அடர் நிறமுள்ள ஒரு ‘கலாம் சட்டை’ அணிந்திருந்தார். அருமையான நிறம் என்று புகழ்ந்தேன். இந்த உடையில்தான் அவரைக் கடைசியாகப் பார்க்கப்போகிறேன் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
குளிர்ச்சியான இரண்டரை மணி நேர விமானப் பயணம். எனக்கு இது கொந்தளிப்பான நிலைதான். ஆனால் அவருக்கு குளிர் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. விமானத்தின் அதிர்வுகளுக்கிடையே நான் குளிரில் நடுங்குவதைப் பார்த்து, ஜன்னல் கதவுகளை மூடியபடி ’இப்போது நீங்கள் பயப்படத் தேவையில்லை’ என்றார்.
அதன்பின் நாங்கள் செல்ல வேண்டியது ஷிலாங் ஐஐஎம். அந்த இரண்டரை மணி நேரக் கார் பயணத்தில் நாங்கள் பேச வேண்டியதும் விவாதிக்க வேண்டியதுமாக நிறைய விஷயங்கள் இருந்தன. கடந்த ஆறு வருடங்களில் நூற்றுக்கணக்கான இத்தகைய நீண்ட பயணங்களை நாங்கள் ஒன்றாக மேற்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பயணமும் முக்கியமானதுதான். அவற்றிலிருந்து மூன்று சம்பவங்கள் / சம்பாஷணைகள் இந்தக் கடைசி பயணத்தில் என்னுடைய நினைவுப் பெட்டகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
முதலாவதாக, டாக்டர் கலாம் பஞ்சாப் தாக்குதல்களைப் பற்றி தன் கவலைகளைப் பகிர்ந்துகொண்டார். ஷிலாங்கில் அவர் பேச வேண்டிய உரையின் தலைப்பு ‘வாழத் தகுந்த கிரகமாகப் பூமியை உருவாக்குவோம்’ என்பதே. பூமியை மாசுப்படுத்துவதும் வாழ முடியாத ஓர் இடமாக மாற்றிக் கொண்டிருப்பதும் மனிதனின் அடாத செயல்களும், வன்முறையும், பொறுப்பற்ற செயல்களும்தான். இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் முப்பது வருடங்களில் பூமி என்ன கதிக்குள்ளாகுமோ, இளைஞர்களாகிய நீங்கள்தான் எதாவது செய்து உங்கள் எதிர்கால உலகத்தைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும்’ என்றார்.
இரண்டாவதாக நாட்டு நடப்புக்களைப் பற்றி பேசினோம். கடந்த இரண்டு நாள்களாக நிகழும் பார்லிமெண்ட் நடவடிக்கைகளைப் பற்றி வருத்தத்தை தெரிவித்தார். ’நான் என்னுடைய காலத்தில் இரண்டு விதமான அரசாங்கத்தைப் பார்த்துள்ளேன். அதன்பிறகு அதற்கும் மேலான எண்ணிக்கையாகவும் அதைப் பார்க்கிறேன். இந்தச் சீரற்ற நிலை எல்லாக் காலத்திலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இது சரியில்லை. வளர்ச்சிக்கான அரசியலை நடைமுறைப்படுத்த ஒரு வழியை விரைவில் கண்டடைந்து செயல்படுத்துவேன்’ என்றார். அதன்பின் அவர் ஷிலாங் ஐஐஎம் மாணவர்களை ஆச்சரியப்படுத்துவதற்காக, நிகழ்வு முடிந்ததும் தருவதற்கான வினாத்தாள் ஒன்றினைத் தயாரிக்கச் சொன்னார். அதில் ஒரு பார்லிமெண்ட் ஆக்கபூர்வமாகவும் சிறப்பாகவும் செயல்பட மூன்று வழிமுறைகளைச் சொல்லும்படியாக அந்த வினாத்தாளில் கேட்டிருந்தோம். நம்மிடமே அதற்கு சரியான தீர்வு இல்லை, பாவம் அவர்களை கேட்கிறோம் என்று சொன்னார். அடுத்த ஒரு மணி நேரம் அதை ஒட்டிய வெவ்வேறு மாற்றுகளைப் பேசினோம். கடைசியாக எந்த மாணவன் இது குறித்து ஒரு யோசனையை சொல்கிறானோ அதை அப்படியே நம்முடைய அடுத்தப் புத்தகமான ‘அட்வான்டேஜ் இந்தியா’வில் இணைத்துவிட முடிவு செய்தோம்.
மூன்றாவதாக, அவருடைய பணிவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஷிலாங்கில் எங்களை ஆறு ஏழு வாகனங்கள் தொடரப் பயணித்தோம். நானும் டாக்டர் கலாமும் இரண்டாவது காரில் பயணித்தோம். எங்களுக்கு முன் ஒரு பாதுகாப்பு வாகனம் சென்றுகொண்டிருந்தது. திறந்த வகையான அந்த ஜீப் வாகனத்தில் மூன்று ராணுவ வீரர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் அமர்ந்திருக்க, நடுவில் இருந்த ஒருவர் மட்டும் துப்பாக்கியுடன் நின்றுக் கொண்டிருந்தார். இதை கவனித்த டாக்டர் கலாம் வருத்தத்துடன் கேட்டார். ‘அவர் ஏன் நின்றுக் கொண்டிருக்கிறார். களைத்துப் போய்விடுவார். அவரை உட்காரச் சொல்லுங்கள்’ என்றார். பணி நிமித்தமும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும்தான் அந்த ராணுவ வீரர் நின்றுக்கொண்டிருக்கக் கூடும் என்று அவருக்கு விளக்கினேன். ஆனாலும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வயர்லெஸ் கருவி வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்டு அவரை அமர வைத்துவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தொலை தொடர்பு சாதனத்தால் அவர்களை தொடர்பில் இணைக்கமுடியவில்லை.
ஷிலாங்கை அடையும் வரை மூன்று முறை சைகை செய்தாவது அவரை அமர வைத்துவிடும்படிக் கேட்டுக்கொண்டார் டாக்டர் கலாம். ஆனால் சைகை செய்து அமர வைக்கின்ற முயற்சிகளுக்கும் பலனில்லை. கடைசியாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். ஆனாலும் மனம் சமாதானம் அடையாமல், ‘வண்டியிலிருந்து இறங்கியதும் நான் அவரைச் சந்தித்து நன்றி சொல்ல விரும்புகின்றேன்’ என்றார் டாக்டர் கலாம்.
பிற்பாடு ஷிலாங்கில் ஐஐஎம் நிறுவனம் சென்று அடைந்ததும் நான் பாதுகாப்பு அதிகாரிகளின் மூலமாக பயணம் முழுக்க நின்றுக் கொண்டே வந்த ராணுவ வீரரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தேன். டாக்டர் கலாம் அவருக்கு வாழ்த்து கூறினார். கை குலுக்கி நன்றி சொன்னார். ‘நீங்கள் களைத்து விட்டீர்களா தம்பி? ஏதாவது சாப்பிட வேண்டுமா? என் பொருட்டு நீங்கள் நிற்க வேண்டியதாயிற்று. மிகவும் வருந்துகின்றேன். மன்னித்துவிடு.’ என்றார் டாக்டர் கலாம். அந்த இளம் வீரரோ டாக்டர் கலாமின் நடத்தையையும் கனிவான பேச்சையும் கேட்டு வார்த்தைகளின்று அப்படியே மலைத்துவிட்டார். என்ன சொல்வதென்றே தெரியாத நெகிழ்ச்சியில் ‘சார், ஆப்கே லியே தோ சே கண்டே பீஹ் கடே ரஹேன்கே’ என்றார். உங்களுக்காக 6 மணி நேரம் கூட நிற்பேன்’ என்று மட்டும் சொன்னார்.
அதன்பின் நாங்கள் விரிவுரை நடக்கவிருந்த அரங்கிற்குச் சென்றோம். டாக்டர் கலாமுக்குத் தாமதமாகச் செல்வது பிடிக்காது. மாணவர்களை ஒருபோதும் காத்திருக்க வைக்கக் கூடாது என்று எப்போதும் சொல்வார். அவருடைய மைக்கை நான் சரி செய்தேன். சுருக்கமாக அவர் பேசிய வேண்டிய அந்தக் கடைசி உரையைப் பற்றி எடுத்துச் சொல்லிவிட்டு இருக்கையில் கணினியின் முன்னால் அமர்ந்தேன். அவருடைய சட்டையில் மைக்கை பொருத்தும் போது ‘விளையாட்டுப் பையா, நல்லா இருக்கியா? என்றார். விளையாட்டுப் பிள்ளை என்று டாக்டர் கலாம் என்னைப் பலமுறை விளித்துள்ளார். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு தொனியில் அது இருக்கும். சில சமயம் மகிழ்ச்சியில், சில சமயம் என்னுடைய குளறுபடிகள் போது, சில சமயம் கவனம் கோரியும், அல்லது கிண்டலாகவும் கூட வேடிக்கையாகவே அப்படிச் சொல்வார். இந்த ஆறு வருடங்களில் அவர் சொல்லும் விதத்திலிருந்தே அவர் மனநிலையை அறிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவானேன். இப்போது அதை அவர் சொன்ன போது, நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்து, ‘ஆம்’ என்றேன். அதுவே எங்களுடைய கடைசிப் பேச்சாகிவிட்டது.
உரையை ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் அவர் திடிரென்று பேச்சை நிறுத்தவே, பின்னால் அமர்ந்திருந்த நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கீழே விழுந்துவிட்டார். நாங்கள் உடனே அவரை தாங்கி, தூக்கினோம். மருத்துவர் விரைந்துவர, எங்களால் இயன்ற அளவில் அவரை மீட்க முயற்சி செய்ய ஆரம்பித்தோம். அவர் விழிகள் லேசாகத் திறந்திருந்தது, ஒரு கையில் அவருடைய தலையை தாங்கிப்பிடித்தபடி மற்றொரு கையால் அவரை என்னால் முடிந்த வரை எழுப்ப முயற்சி செய்தேன். என் கைகளை இறுகப் பற்றியது அவரது கரங்கள். என்னுடைய விரல்களைப் பின்னியது. சட்டென்று அவர் முகத்தில் ஆழ்ந்த அமைதி. அந்த அறிவுச் சுடரான விழிகளில் அசைவில்லை. ஒரு வார்த்தையும் அவர் சொல்லவில்லை. எவ்வித வலியும் அவரிடத்தில் துளியும் இல்லை. ஐந்து நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த மாமனிதர் மறைந்துவிட்டார் என்று தெரிவித்தார்கள். அவர் பாதங்களை கடைசி முறையாகத் தொட்டு வணங்கினேன்.
விடைகொடுக்கிறேன் என்னுடைய பழைய நண்பரே, என்னுடைய ஆசானே, அடுத்த பிறவியில் சந்திக்கும் வரையில் என்னுடைய சிந்தனைகளில் எப்போதும் நிலைத்துள்ளீர்கள்.
திரும்பிப் பார்க்க நினைவுத்திரை மீண்டும் விரிந்தது. முன்பு ஒருமுறை அவர் சொன்னது ஞாபகத்திரையில் ஓடியது. ‘இப்போது நீ இளைஞன். நீ இங்கிருந்து போன பின்பு உலகம் உன்னை எப்படி நினைவு கொள்ள வேண்டும் என இப்போதே தீர்மானித்துக்கொள்’ என்று அவர் என்னிடம் அடிக்கடி சொல்வார். அவரை மலைக்க வைக்கின்ற வகையில் பதில் சொல்லி ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று ஆழமாக யோசித்தும் திருப்தியான பதில் எதுவும் எனக்கு பிடிபடாததால் அவரிடமே அதே கேள்வியைத் திருப்பினேன். ‘நீங்கள் சொல்லுங்கள். இந்த உலகம் உங்களை எப்படி நினைவு கூற வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? குடியரசுத் தலைவர் என்றா? விஞ்ஞானி என்றா? எழுத்தாளர் என்றா? ஏவுகணை மனிதர் என்றா? இந்தியா 2020 வுடனோ, டார்கெட் 3 பில்லியன் வகையிலா?’ என்று மூச்சுவிடாமல் கேட்டேன். இதில் ஏதேனும் ஒன்றைச் சொல்வார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ‘ஆசிரியராக’ என்று பதிலளித்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட அவருடன் அவருடைய ஏவுகணை காலத்து நண்பர்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சொன்னார் : ‘குழந்தைகள் தம்முடைய பெற்றோரை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் துரதிர்ஷடமாக இன்றைய காலக்கட்டத்தில் அப்படி நடப்பதில்லை.’ என்றவர் மெளனத்தில் சற்று நேரம் ஆழ்ந்துவிட்டு பின் சொன்னார் ‘முதியவர்களும் இரண்டு விஷயங்களைச் கடைப்பிடிக்க வேண்டும். நிறைய சொத்துக்கள் சேர்த்து விட்டுச் செல்லக்கூடாது. அது குடும்பத்தில் பகையையும் சண்டையையும் ஏற்படுத்தும். இரண்டாவதாக, பணியாற்றிக் கொண்டிருக்கின்ற வேளையில் எந்தவிதமான பிணியோ, நோயோ வாட்டாத நிலையில் இறந்து போகின்றவர்தான் பேறு பெற்றவர்கள். Good byes should be short, really short பிரிந்துச் செல்வதும் மிகச் சுருக்கமான, மிக மிக சுருக்கமான நேரத்தில் நடந்து முடிந்துவிட வேண்டும்.’ என்றார்.
இன்று நான் திரும்பிப் பார்க்கிறேன். அவருடைய கடைசி பயணத்தில் கூட அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் அவருடைய பெரும் விருப்பமாகவும் அவரை நினைவு கூரத்தக்கவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தது. கடைசி நொடி வரை அவர் நின்று கொண்டிருந்தார், வேலை செய்துகொண்டிருந்தார், உரையாற்றிக் கொண்டிருந்தார். இப்போது அந்த நல்லாசான் நம்மை விட்டுச் சென்றுவிட்டார் ஆனால் அவர் நமக்குக் கற்றுத் தந்தவை போதித்தவை நம்முன் காலத்திற்கும் உயரமாக நம் முன்னால் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. இறுதி மூச்சுவரை வெற்றியாளராகவே வாழ்ந்த அவர் இந்த உலகத்தை விட்டுச் செல்கையில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துக்களையும் அன்பையும் தன்னுடன் எடுத்துச் செல்கின்றார்.
அவருடனான இனிய பொழுதுகளை இனி நான் தவறவிடுகிறேன். அவருடனான சந்தோஷங்களை, பிரியங்களை, பயணங்களை, அவர் எனக்குச் சொல்லித் தரும்பாடங்களை நான் இழக்கிறேன் ஆனால் அவர் எனக்களித்த கனவுகளை, என்னுடைய கனவினை நான் காணும்படியாக கற்பித்தவற்றை, எதுவும் சாத்தியம் என்று உறுதியாக நம்பவைத்த கணங்களை, அவருடைய வார்த்தைகளை நான் என்னுடன் என்றென்றைக்குமாக உயிர்ப்பாக வைத்திருப்பேன். அவர் மறைந்துவிட்டார், இந்த உலகிற்கு அவர் அள்ளித் தந்தவை இனி தொடர்ந்து கொண்டே இருக்கும். என்றென்றும் வாழ்க டாக்டர் கலாம்!
(டாக்டர் கலாமுடன் அவரின் உதவியாளராகச் சில ஆண்டுகளாகச் செயலாற்றி வந்த ஸ்ரீஜன் பால் சிங்கின் ஃபேஸ்புக்கில் எழுதிய கட்டுரை.)
தமிழாக்கம் – உமா ஷக்தி
Courtesy: Dinamani