Flash News Technology தற்போதைய செய்தி

ஜியோவின் இலவச சேவைகளுக்கு டிராய் வைத்த செக்

ஜியோ நெட்வொர்க்கின் மூன்று மாத இலவச இண்டெர்நெட் வழங்கும் சேவைக்கு டிராய் தடைவிதித்ததையடுத்து அத்திட்டத்தை திரும்பப் பெறுவதாக ஜியோ அறிவித்துள்ளது.

மும்பை:

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வொர்க் சேவைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மார்ச் 31-ந்தேதி வரை அதன் சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் ஜியோ கட்டண சேவைகள் பிரைம் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், ஜியோ பிரைம் திட்டத்தில் சேர கடைசி நாள் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டதுடன், ஜியோ சேவைகள் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த ஆறு மாதங்களாக இலவசமாக வழங்கி வந்த சேவைகள் மார்ச் 31-ந்தேதியுடன் நிறைவு பெறும் என தெரிவித்திருந்த நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ‘சம்மர் சர்ப்ரைஸ்’ (Summer Surprise) என்ற புதிய சலுகை அறிவிக்கப்பட்டதும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் இணையத் தொடங்கினர்.

இந்நிலையில், இந்திய தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஜியோ-வின் இந்த ‘சம்மர் சர்ப்ரைஸ் பேக்கை’ கைவிடுமாறு கூறியுள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய ஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.