political

தமிழகத்தில் 15 தொகுதிகளை குறிவைக்கும் அமித்ஷா: அடுத்த மாதம் 10-ந்தேதி வருகிறார்

சென்னை:

பா.ஜனதாவின் வெற்றிக்கு வியூகம் அமைத்துக் கொடுப்பதில் அமித்ஷா கைதேர்ந்தவர். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் அமித்ஷாவின் தேர்தல் வியூகம் தான் அந்த கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.

பாராளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகள்தான் உள்ளன. அடுத்ததாக பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை பா.ஜனதா தொடங்கி விட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளுக்கு இலக்கு நிர்ணயித்து பா.ஜனதா தனியாக 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல் வருகிற தேர்தலில் ‘நாங்கள் 400’ என்ற இலக்கை பா.ஜனதா நிர்ணயித்துள்ளது. 400 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும் அளவில் பணிகள் அமைய வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டுஉள்ளார்.

பா.ஜனதா வலு இல்லாத மாநிலங்களில் வருகிற தேர்தலில் தனிக்கவனம் செலுத்த அமித்ஷா திட்டம் வகுத்துள்ளார்.

அதன்படி மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய கடலோர மாநிலங்களை ஒருங்கிணைத்து முத்து மாலை திட்டம் என்று தனி திட்டத்தை அமித்ஷா உருவாக்கி இருக்கிறார்.

இந்த மாநிலங்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் பிராந்திய கட்சிகள் மீதான மோகம் தான்.

எனவே இந்த தேர்தலில் மக்களை கவர பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது மற்றும் தனிப்பட்ட முறையில் கட்சியின் செல்வாக்கை வளர்ப்பது போன்ற பல ரகசிய திட்டங்களை அமித்ஷா கையில் வைத்துள்ளார்.

பா.ஜனதா பெருமளவில் வெற்றி பெறாமல் இருந்தாலும் கணிசமான வாக்குகளை பெற்ற அடிப்படையில் 130 தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர். இதில் 15 தொகுதிகளுக்கு ஒரு டெல்லி தலைவர் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் 15 தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் தே.மு.தி.க., பா.ம.க. தவிர பா.ஜனதாவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டு 1½ லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர். தென் சென்னை, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், கோவை, திருப்பூர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 தொகுதிகள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே மாவட்ட தலைவர்கள் தலைமையில் கட்சி செயல்படுகிறது. இப்போது தனியாக 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தனி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய செயலாளர் முரளிதரராவ் கடந்த மாதம் இந்த பட்டியலை வெளியிட்டார்.

அடுத்ததாக சட்டமன்ற வாரியாக பொறுப்பாளர்கள், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 10 பேர் கொண்ட குழுக்களை அமைக்கவும் அந்த குழுக்களில் தலித், பெண், இளைஞர் ஆகியோருக்கு கண்டிப்பாக பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பட்டியலை அடுத்த மாதம் (மே) 30-ந்தேதிக்குள் டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்க அமித்ஷா அடுத்த மாதம் 10-ந்தேதி சென்னை வருகிறார். 3 நாட்கள் தமிழகத்தில் முகாமிடுகிறார். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்குகிறார்.

பொதுவாக அமித்ஷா 3 நாட்கள் ஒரு மாநிலத்தில் தங்கி இருப்பதில்லை. தமிழகத்தின் மீது அவர் தனிக்கவனம் செலுத்த முடிவெடுத்து இருப்பதால் 3 நாட்கள் தங்குகிறார்.

அதிலும் பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலை தமிழக மக்கள் மத்தியில் வேகமாக பரப்பப்பட்டு வருவதால் அதை முறியடிப்பதற்கான திட்டங்களையும் அவர் வகுத்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக பா.ஜனதா தேர்வு செய்துள்ள 15 தொகுதிகளுக்கும் 15 மத்திய மந்திரிகள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் அந்த தொகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு பா.ஜனதா அரசின் திட்டங்களையும் மக்கள் மத்தியில் விளக்குகிறார்கள். அந்த வகையில் தென் சென்னையில் இன்று மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.