political

நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்: இன்று பிற்பகலில் ஆஜராகிறார்

சென்னை:

ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்த மறுநாளே அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. கடந்த 7-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்த போதுதான் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இதனையடுத்து, தேனாம்பேட்டை ஜெயம்மாள் சாலையில் உள்ள சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ‘‘ராடான் மீடியா ஒர்க்ஸ்’’ நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இரவு 9 மணி வரை நடந்த இந்த சோதனையின் போது ராடான் நிறுவனத்தில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராடான் நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகை ராதிகாவுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று பிற்பகலில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஏற்று ராதிகாவும், சரத்குமாரும் இன்று பிற்பகலில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையின் போது ராடான் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே, வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மன் தொடர்பாக சரத்குமாரிடம் இன்று 3-வது முறையாக விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் இன்று பிற்பகலில் சரத்குமாரும் ஆஜராகிறார்.