political

அ.தி.மு.க இணைப்பு முயற்சி: ஓ.பி.எஸ்.மீது அமைச்சர் ஜெயகுமார் மீண்டும் பாய்ச்சல்

ஸ்ரீபெரும்புதூர்:

அ.தி.மு.க. வில் இருந்து டி.டி.வி. தினகரன் விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதை வரவேற்ற ஓ. பன்னீர்செல்வம் ‘எங்கள் தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி’ என்றார்.

ஓ. பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்தார். , ஓ.பி.எஸ். நிர்ப்பந்தத்தால் டி.டி.வி. தினகரனை நாங்கள் விலக்கி வைக்கவில்லை. 1½ கோடி அ.தி.மு.க தொண்டர்கள் விருப்பத்தின் பேரிலேயே டி.டி.வி தினகரனை கட்சியில் இருந்து விலக்கினோம். “அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கும் நான் தான் காரணம் என்று ஓ.பி.எஸ். சொன்னாலும் சொல்வார்” என்றார்.

டி. ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு ஓ.பி.எஸ் அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி நேற்று அளித்த பேட்டியின் போது டி.ஜெயக்குமாரை கண்டித்தார்.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள ஏரி மராமத்து பணியை அமைச்சர் டி. ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது பேட்டி அளித்த டி.ஜெயகுமார், ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் விமர்சித்தார்.

அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரன் குடும்பத்தை சேர்ந்தவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பம். ஏற்கனவே தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. இனி கட்சியிலும், ஆட்சியிலும் தினகரன் குடும்பத்தினர் தலையீடு இருக்காது.

ஓ. பி.எஸ் சிடம் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் யாரும் இல்லை. வருமான வரித்துறை சோதனைக்கு அமைச்சர்கள் யாரும் பயப்படவில்லை. மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

ஜெயலலிதா ஆட்சி இந்த நான்கு ஆண்டுகள் மட்டும் அல்ல. வரும் தேர்தல்களிலும் மக்களை சந்தித்து மீண்டும் ஆட்சியை அமைப்போம். இது தான் எங்கள் இலக்கு. எல்லாவற்றிற்கும் முற்றுபுள்ளி வைத்த போதும், சிலர் ஒன்று ஒன்றாக தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் மனதில் தெளிவு இல்லை.

நாங்கள் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக உள்ளோம். பேச வருவதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை.

கூரை ஏரி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏரி வைகுண்டம் பார்த்தார்களாம். அந்த மாதிரி கதையாக அவர்கள் நிலை உள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சொன்னதை போல் தான் நாங்கள் நடக்கிறோம். தொண்டர்கள் மன ஓட்டத்தையே நான் பிரதிப்பலித்தேன். யாருடைய நிர்பந்தத்தின் காரணமாவும் தினகரனை ஒதுக்கி வைக்கிறேன் என்று சொல்லவில்லை.

தொண்டர்களின் உணர்வை நாங்கள் ஒன்று கூடி சொன்னோம். அதை ஓ.பி.எஸ். எங்களது வெற்றி என சொன்னால் என்ன அர்த்தம்?.

இவ்வாறு அவர் கூறினார்.