political

அமித் ஷாவின் ‘ஆப்ரேஷன் தமிழ்நாடு’! -அருண் ஜெட்லியை அசைத்த ஆவணங்கள்

ஆளும்கட்சி அமைச்சர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. ‘ உ.பி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அ.தி.மு.கவை பல துண்டுகளாக உடைக்கும் முடிவில் இருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. அதன் ஒருபகுதிதான் வருமான வரித்துறை ரெய்டுகள்’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடக்கும் பணப்பட்டுவாடா குறித்து, தி.மு.க, சி.பி.எம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன. எதிர்க்கட்சிகளின் புகார் குறித்தெல்லாம் கவலைப்படாத அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரன், வழக்கம்போல பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ‘ தேர்தலை ரத்து செய்யும் நோக்கில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. தேர்தலை ரத்து செய்யக் கூடாது. போட்டியிடுவது எங்கள் உரிமை’ என்று பேசி வந்த சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘ தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என நேற்று தேர்தல் ஆணையத்துக்குப் புகார் மனு அனுப்பினார். பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகளும் தேர்தல் ரத்து செய்யப்படுவது குறித்து வலியுறுத்தி வருகின்றன. நேற்று காலை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து நடந்த ரெய்டால், கொதிப்பில் இருந்தார் தினகரன். ” ஆர்.கே.நகரில் நடக்கும் பணப்பட்டுவாடாவை இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆளும்கட்சியின் அத்தனை அமைச்சர்களும் களத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகளும் கவனித்துக் கொண்டு வருகின்றனர். பண விநியோகம் ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை அமித் ஷா முடிவு செய்துவிட்டார். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் டெல்லியில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள் கவலைப்படவில்லை. அவர்களுடைய நோக்கம் எல்லாம், சசிகலா தலைமையிலான அ.தி.மு.கவை பல துண்டுகளாக உடைக்க வேண்டும் என்பதுதான்” என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,

ஜெட் லி

” ஜெயலலிதா மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்திலேயே ஆளும்கட்சியின் வரவு செலவுகளை முழுமையாகக் கண்காணிக்கத் தொடங்கியிருந்தனர். 2011-ம் ஆண்டு கார்டனுக்குள் சேகர் ரெட்டி கால்பதித்த நேரத்தில் இருந்து தற்போது வரையில் நடக்கும் அத்தனை விவகாரங்களையும் சேகரிக்கத் தொடங்கினர். சேகர் ரெட்டி மற்றும் ராமமோகன ராவ் தொடர்புகளில் இருந்து கார்டன் வரை நீண்ட கணக்கு வழக்குகள், மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. இவர்களுக்குப் பக்கபலமாக இருந்த முன்னாள் மாண்புமிகு, தற்போதைய மாண்புமிகு, ரெய்டுக்கு ஆளான அமைச்சர் வரையில் பணப் போக்குவரத்து தொடர்பான விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அலுவலகத்தில் இருந்து தரப்பட்டன. மத்திய நேரடி வரிகள் விதிப்பு ஆணையத்தின் தலைவரிடம் நேரடி தொடர்பில் இருந்தனர் வருமானவரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள். சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் வளைக்கப்பட்ட நேரத்திலேயே, அடுத்த ரெய்டு எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் போன்றோரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களில் ரெய்டு நடவடிக்கைக்கு ஆளானார் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவ். அவரது மகனின் வர்த்தக நிறுவனங்களைக் குடைந்தது வருமான வரித்துறை. கூடவே, அமலாக்கத்துறையும் சி.பி.ஐயும் இணைந்து கொள்ள, வழக்கு விவகாரம் முக்கிய கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. ‘மாநில அரசின் ஊழல்களுக்கு கார்டனும் ஒரு காரணம் என்ற அடிப்படையில், அங்கும் ரெய்டு நடக்கலாம்’ என்ற தகவல்களும் பறந்தன. இந்தநேரத்தில், ரெய்டுக்கு எதிராக அதிரடியாகப் பேட்டி அளித்தார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். இதன்பிறகு ரெய்டு நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்திருந்தனர் அதிகாரிகள். இப்போது அமைச்சரை நோக்கி ரெய்டு நடவடிக்கை பாய்வதற்குக் காரணமே, அரசின் முன்னாள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்  டெல்லிக்குக் கொடுத்த தகவல்கள்தான்” என விவரித்து முடித்தார்.

” தமிழகத்தில் அ.தி.மு.கவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வழக்கு ஒன்றுக்காக டெல்லியில் நடத்தப்பட்ட விவகாரங்கள் குறித்து, மத்திய உளவுத் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் ஏராளமான தகவல்களைச் சேகரித்திருந்தார். ‘ யார் மூலம் எந்த இடத்தில் பரிவர்த்தனை தொடங்கியது?’ என்ற புள்ளியில் தொடங்கி, அத்தனை விஷயங்களையும் ஆதாரங்களாகத் தொகுத்து, மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதையடுத்து, தமிழகத்தின் முக்கிய அதிகாரியாக இருந்த ஒருவரை, நேரில் அழைத்து விசாரித்தனர். ‘ நீங்கள் மற்ற விஷயங்களைத் தெளிவுபடுத்திவிட்டால், உங்கள் மீது எந்தச் சிக்கல்களும் வராது என உறுதியளிக்கிறோம்’ என வாக்குறுதி அளித்தனர். இதை அவர் நம்பும் வகையில், அவர் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்யும் வேலைகளைத் தொடங்கினர். இதனால் உற்சாகமான அந்த அதிகாரி, ஆளும்கட்சியின் அனைத்து விவகாரங்களையும் கூறிவிட்டுத்தான் சென்னைக்கு விமானத்தைப் பிடித்தார். அவருக்கு உறுதியளித்தபடியே, டெல்லி மேலிடமும் நடந்து கொண்டது. அவர் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே விஜயபாஸ்கர் வீட்டைக் குடையத் தொடங்கிவிட்டது வருமான வரித்துறை. இதற்கு மாநில அரசிடம் இருந்து எதிர்ப்பு வராது என்பதும் மத்திய அரசுக்குத் தெரியும். மாநில அரசின் பொதுப் பணித்துறை அமைச்சராகவும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ‘நெடுஞ்சாலை மைல் கற்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்க வேண்டும்’ என அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தபோதும் அவர் அமைதியாக இருந்தார். ‘ பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பதால், மைல் கற்களில் உள்ள எழுத்துக்களை அழிப்பதற்கு உத்தரவிடுவார்’ என பா.ஜ.க நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆட்சியில் இருப்பவர்களின் மௌனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். அதையொட்டியே ரெய்டு நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிராக ஆட்சியில் உள்ளவர்கள் பேச ஆரம்பித்தால், சேகர் ரெட்டி வாக்குமூலத்தை வைத்து, அவர்களின் மீதும் ரெய்டு ஆயுதம் பிரயோகிக்க வாய்ப்புள்ளது என்பதால் மௌனம் காக்கின்றனர். வரக் கூடிய நாட்களில் அ.தி.மு.க பல துண்டுகளாகும் வாய்ப்புகளே அதிகம். இவை அனைத்துக்கும் பின்னால் அமித் ஷா என்ற ஒற்றை மனிதர்தான் இருக்கிறார்” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

‘தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் முகாம்; வருமான வரித்துறை ரெய்டுகள்; இரட்டை இலை முடக்கம்’ என தமிழக அரசியலை நோக்கி வேகத்தை அதிகப்படுத்தி வருகிறார் அமித் ஷா. அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.