political

ஆர்.கே.நகர் தேர்தலில் முறைகேடு: கவர்னரிடம் தி.மு.க. புகார் மனு

சென்னை:

ஆர்.கே.நகரில் இன்று நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் மும்பை சென்று தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பாக போட்டியிட்ட டி.டி. வி.தினகரன் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய நாள் முதல் வாக்காளர்களுக்கு பல வழிகளில் பணப்பட்டுவாடா செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களோடு சேர்ந்து குறிப்பாக விஜயபாஸ்கருடன் கைகோர்த்து தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் வாக்குகளையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் வகையில் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து சதி குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

வீடு வீடாக சென்று ஒரு வாக்காளருக்கு 10,000 ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும் என்றும், விளக்குகள், புடவைகள், வேட்டிகள், பால் டோக்கன்கள், மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்க வேண்டும் எனவும் அவரின் கட்சியில் உள்ள தேர்தல் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்.

மேலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு பணத்தினை எடுத்துச்செல்ல காவல் துறை வாகனங்கள், சிவப்பு விளக்குகள் பொறுத்தப்பட்ட அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ மகிழுந்துகள் போன்ற மாநிலத்தின் நிர்வாக இயந்திரங்களை இவர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.24 லட்சம் வாக்காளர்களில் 2.63 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளித்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ஊடகங்களில் பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் கே.ராஜூ, எம்.சி. சம்பத், வி.எம்.ராஜலட் சுமி, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மற்றும் ராஜ்ய சபா எம்.பி ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ன.

உண்மையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முதல்- அமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் திட்டமிட்டு செயல் படுத்தி உள்ளனர்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 171(இ)-ன்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அபாரதத்துடன் கூடிய ஒரு வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.24 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி வரை பணப்பட்டுவாடா செய்வதற்கு முதல்- அமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்ததற்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற வரலாறு காணாத தேர்தல் முறைகேடுகள் மற்றும் வருமான வரித்துறையினரின் சோதனையில் கிடைத்த முக்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. உண்மையில், ஆளுங்கட்சி மற்று இதர முக்கிய கட்சிகளின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தேர்தல் சிறப்பு பார்வையாளர் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம். இது மாதிரி குற்றங்களில் ஈடுபட்டு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.,க் கள் மேற்கண்ட சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டாலே மக்கள் பிரநிதித்துவச் சட்டப் பிரிவு 8(1)ன் கீழ் குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பை சந்திப்பார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(1) ன் படி, கவர்னர் தான் முதல்- அமைச்சரை நியமிக்கிறார். அப்படி நியமிக்கப்படும் அமைச்சர்கள் ஆளுனர் அவர்களின் விருப்பம் தொடரும் வரைதான் பதவியில் நீடிக்க முடியும்.

ஆகவே தற்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்துள்ள குற்றம் சாட்டும் ஆதாரங்களின் மூலம் அவர்கள் அனைவரும் அரசு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி இருப்பதும், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதும் மற்றும் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்தல் குற்றங்கள் புரிந்திருப்பதும் தெரிய வருகிறது.

இதன் மூலம், அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகளையும், அரசியலமைப்பின் அறநெறிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு தவறு இழைத்திருப்பதற்கான முகாந்திரம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிய வந்துள்ளது.

எனவே, கவர்னர் உடனடியாக விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து, அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும். அவர்கள் அப்படி செய்யத்தவறும் பட்சத்தில், அப்பதவிகளை நிர்வகிக்கும் உரிமையை இழந்த அவர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும். ஜனநாயகம் மற்றும் மாநில நலன் கருதி, அதிமுக அரசில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.