political

பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மட்டும் தான் இந்தியர்களா? : தருண் விஜய்க்கு, ப.சிதம்பரம் கேள்வி

பாஜக முன்னாள் எம்.பி.,யும், இந்திய-ஆப்ரிக்க நட்புறவு குழுத் தலைவராகவும் இருப்பவர் தருண் விஜய். தமிழர், தமிழ் என பல கட்டங்களிலும் உணர்ச்சிப் பொங்க ஆதரவும், அறிக்கைகளும் கொடுத்து வந்தவர். தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என தென் இந்தியக் கறுப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா? என்று சர்ச்சைக்குரிய இனவாதக் கருத்தினை முன்வைத்து பேசியுள்ளார்.

P.Chidambaram

மேலும், ‘நாங்கள் இனவாதிகள் என்று குறிப்பிடுவது சரியல்ல. கிருஷ்ணர் என்ற கறுப்பு நிறக் கடவுளை வணங்குகிறோம். ஆப்ரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த பலர் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர்’, என்று கூறியிருந்தார்.

இவ்வளவு காலம் இந்தியர்கள், தமிழர்கள், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் என உணர்ச்சிப் பொங்க பேசிவந்த தருண் விஜய், தென் இந்தியர்களை கறுப்பர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்காக அவருக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில்,  ‘கறுப்பர்களுடன் நாங்கள் வாழ்கிறோம் என தருண் விஜய் கூறியுள்ளார். நான் அவரைப் பார்த்து கேட்கிறேன். நாங்கள் என அவர் குறிப்பிடுவது பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களையா? அவர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என்று குறிப்பிடுகிறாரா?’  என கூறியுள்ளார்.