political

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

 சென்னை:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கோனாப்பட்டை பகுதியை சேர்ந்தவர் முருகப்பன். இவருடைய மகன் தமிழ்மணி (வயது 19). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் கடந்த 14-ந் தேதி தன்னுடைய நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது, எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். ஆனால் அவருடைய இதயம், சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல் ஆகியவை நல்ல நிலையில் இயங்கி கொண்டு இருந்தன. இதையடுத்து தமிழ்மணியின் பெற்றோரிடம் உங்கள் மகனின் உடல் உறுப்புகளை உயிருக்கு போராடும் நோயாளிக்கு பொருத்தி மறுவாழ்வு கொடுக்கலாம் என்று டாக்டர்கள் எடுத்துக்கூறினர்.

அதற்கு அவருடைய பெற்றோர் மனநிறைவுடன் சம்மதம் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் செய்வது தொடர்பாக உடனடியாக தமிழக அரசிடம் சட்டப்பூர்வமான அனுமதி பெறப்பட்டது. நேற்று காலை 11.30 மணிக்கு மீனாட்சி மிஷன் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் ரமேஷ் அர்த்தநாரி, மோகன், சம்பத்குமார், ரவிச்சந்திரன், ராஜன், மகாராஜன், கண்ணன் உள்ளிட்டோர் அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை எடுத்தனர்.

தமிழ்மணியின் உடலில் இருந்து 2 சிறுநீரகம், 2 கண்கள், ஒரு கல்லீரல், இதயம் எடுக்கப்பட்டன. இதில் ஒரு சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கும், 2 கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், இதயம் சென்னை மலர் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு இதயத்தை எடுத்துக்கொண்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சு மூலம் 20 நிமிடத்தில் அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு இதயத்தை கொண்டு வந்தனர்.

இதயம் வந்ததும், மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயது வாலிபருக்கு, மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த இதயத்தை பொருத்தினார்கள். தமிழ்மணியின் உடல் உறுப்புகள் மூலம் 6 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர்.

About the author

Julier