political

சபரிமலை கோவிலில் தங்கத்தில் புதிய கொடி மரம் அமைக்க அடிக்கல் பிரதிஷ்டை

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருந்த தங்க கொடி மரம் பழுதானதை தொடர்ந்து புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சபரிமலை காட்டில் இருந்து உயர் ரக தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டு பம்பைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த மரம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூலிகை தைலத்தில் பதப்படுத்தப்பட்டு வந்தது.

புதிய கொடி மரத்தை ஏற்கனவே கொடி மரம் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்ய தேவசம் போர்டு ஏற்பாடு செய்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சபரிமலையில் நடந்தது.

சன்னிதானத்தில் 18-ம் படி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பீடம் அமைக்கும் பணி நடந்தது. தந்திரி கண்டரரு ராஜிவரரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்தினார். இதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடி மரத்தில் பதிக்க 9.160 கிலோ கிராம் தங்க கட்டிகள் தேவைப்படும். அதனை கோவில் நிர்வாகிகள் நேற்று ஆசாரிகளிடம் வழங்கினர். புதிய கொடி மரம் அமைக்க ரூ.3 கோடியே 21 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையை ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. அந்த தொகை தேவசம் போர்டு வங்கி கணக்கில் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது. எனவே புதிய கொடி மரம் விரைவில் நிறுவப்படும் என தெரிகிறது.

சபரிமலை ஐயப்பனின் பிறந்த நாளான பங்குனி உத்திர திருவிழா நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நாளை அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. அதன்பின்பு நாளை இரவு நடை அடைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தந்திரி முடிவுப் படி நாளை மறுநாளும் காலையிலேயே நடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

About the author

Julier