Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஜெயலலிதாவின் வாரிசு யார்? ஆர்டிஐ அளித்த அதிரடி பதில்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு, சட்டப்படி வாரிசுதாரர் எவர் பெயரும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என்பதால், அவரது அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் பல தகவல்களை வெளியிடுபவர், சமூக ஆர்வலர் பாஸ்கரன். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர் என எவரையும் குறிப்பிடவில்லை என்பதை அறிந்துள்ளார். இதனால், ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழகச் சொத்தாக அறிவிக்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர் யார் என்ற தகவலைக் கேட்டுள்ளார் பாஸ்கரன். அதில் கிடைத்த தகவலில், ஜெயலலிதா இதுவரை யாரையும் தன் வாரிசுதாரர் எனக் குறிப்பிடவில்லை என்றும், இதுவரை அது தொடர்பான எந்த ஒரு தகவலும் தமிழக அரசுக் குறிப்பில் இல்லை எனவும் பதில் வந்துள்ளது.

அதன் பின்னர், தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறையில், தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட பாஸ்கரன், அங்கிருந்தும் ஒரே தகவலையே பெற்றார்.  ஜெயலலிதாவின் உயில், வாரிசுதாரர் தகவல் என எந்தவொரு தகவலும் சார்-பதிவாளர் அலுவலகம் முதற்கொண்டு தலைமைச் செயலகம் வரை இல்லை எனக் கூறுகிறார் பாஸ்கரன்.

இதனால், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோர, சட்டப்படி யாரும் இல்லாத காரணத்தால், அவற்றை மாநில அரசின் உடைமையாக்க வேண்டும் என்று கூறுகிறார் இந்த ஆர்வலர்.

Exit mobile version