Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

காஷ்மீர்: மாணவர்கள் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் – கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஸ்ரீநகர்:
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினர் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவர்கள் இன்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  இதையடுத்து, ஜம்மு, ஸ்ரீநகர், கன்டேர்பால், பாரமுல்லா, சோபியான் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களில் இன்று காலையில் இருந்து மாணவ-மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் உள்ள ஸ்ரீ பிரதாப் கல்லூரி வழியாக பேரணியாக சென்றனர். அப்போது, பாதுக்காப்பு வளையம் மற்றும் சாலை தடைகளை ஏற்படுத்தி மாணவர்கள் முன்னேறி செல்ல இயலாதவாறு பாதுகாப்பு படையினர் தடுத்தி நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களுக்கும் அங்கு நின்றிருந்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை வீரர்களுக்கும் இடையில் திடீரென வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. பேரணியாக வந்தவர்களில் சிலர் பாதுகாப்பு படையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
நிலைமை விபரீதம் ஆகாமல் தடுக்கும் வகையில் முதலில் லேசான தடியடி நடத்திய பாதுகாப்பு படையினர், பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். அப்போது மாணவர்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடினர். இதனால் லால் சவுக் பகுதியில் உள்ள மவுலானா ஆசாத் சாலை போர்க்களம் போல் காட்சியளித்தது. அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் இதரசில மாவட்டங்களிலும் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி மாணவ அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தகவல்களும், தாக்குதல் தொடர்பான புகைப்படங்களும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக தீயாக பரவியது.
இதையடுத்து, இன்று பிற்பகலில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
Exit mobile version