political

லாரி ஸ்டிரைக்: ஐதராபாத்தில் 2-வது நாளாக மீண்டும் பேச்சுவார்த்தை

ஐதராபாத்:

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் இந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கடந்த 30-ந் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கியது.

10-வது நாளாக இன்றும் நீடித்த போராட்டத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் லாரிகள் ஓடவில்லை. இதனால் 6 மாநிலங்களிலும் 60 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பொருட்கள் பரிமாற்றம் முடங்கி உள்ளது.

லாரி உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி தொழிலை நம்பி உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்சூரன்ஸ் கட்டண உயர்வு தொடர்பாக தென் இந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொது செயலாளர் சண்முகப்பா மற்றும் நிர்வாகிகளுடன் இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் மற்றும் மத்திய மந்திரியும் நேற்று ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் ஐதராபாத்தில் இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் மற்றும் மத்திய தரை வழி போக்குவரத்து துறை அதிகாரிகள், சண்முகப்பாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என தெரிகிறது.

இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தமிழ்நாடு தலைவர் குமாரசாமி இன்று கூறுகையில், ஐதராபாத்தில் 2-வது நாளாக இன்று மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் ஆதரவுடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து லாரிகளும் இன்று இரவு முதல் ஓடாது என்றார்.

About the author

Julier