political

முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற மாரியப்பன்

பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மத்திய அரசு வழங்கிய பத்மஶ்ரீ விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். 

2016-ம் ஆண்டில் பிரேசில் நாட்டில் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் இந்தியா சார்பில் தங்கப்பதக்கம் வென்றார். மாரியப்பன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாரியப்பனுக்கு மத்திய அரசு 2016-ம் ஆண்டுக்கான பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன் மாரியப்பன் மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஶ்ரீ விருதைப் பெற்றார்.

இந்த நிலையில் மாரியப்பன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது, மத்திய அரசு வழங்கிய பத்மஶ்ரீ விருதினை முதல்வரிடம் காண்பித்து மாரியப்பன் வாழ்த்துப் பெற்றார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார், பயிற்சியாளர் சத்தியநாரயணன், தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்தஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.