political

கிரண்பேடியை பாகிஸ்தான் தூதராக நியமிக்க வேண்டும்: அன்பழகன் எம்.எல்.ஏ. கிண்டல்

புதுச்சேரி, :

புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவை கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன. ஒரு புறம் காங்கிரஸ் அரசானது அமைச்சர்கள் மூலம் கவர்னரின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டுகிறது.

புதுவை காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்கும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சி என்ற முறையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அதன் பிறகு முதல்-அமைச்சர் நாராயணசாமி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தனக்கும், கவர்னருக்கும் எந்தவித கருத்து வேறு பாடும், மோதலும் இல்லை என்று கூறுகிறார். இதன் மூலம் நாராயணசாமி மக்களை குழப்பி வருகிறார். இது தொடர்பாக புதுவை மக்களுக்கு ஸ்டாலின்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

கிரண்பேடி, தான் வகிக்கும் பதவிக்கு உரிய அதிகாரத்தை, மாண்பை மீறி செயல்பட்டு வருகிறார். தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரடியாக விமர்சித்தும் வருகிறார்.

ஒட்டு மொத்த சட்ட மன்றத்துக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார். இதன் மூலம் புதுவை சட்டமன்றத்தையே அவர் அவமதிக்கிறார்.

ஆனால், அரசு இதை கண்டும், காணாமலும் இருப்பது வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஏற்கனவே கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் 5 ஆண்டுகளில் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் கவர்னர்தான் காரணம்.

ஏனெனில், டெல்லி சென்று புதுவை அரசுக்கு நிதி அளிக்க வேண்டாம் என கவர்னர் கூறி வருகிறார். அதோடு மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தாருங்கள் என கோரிக்கை வைத்தால் நான் வியாபாரி அல்ல என்று கவர்னர் பதில் அளிக்கிறார்.

மார்வாடி கடையில் கடன் வாங்கி தரும்படி கவர்னரிடம் யாரும் கேட்கவில்லை. அவர் தனது பதவிக்கேற்ற பதிலை தர வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி சம்பந்தமாக அதிகாரிகளை நேரில் அழைத்து விளக்கம் கேட்டு இருக்கலாம். ஆனால், இதனை விடுத்து பகிரங்கமாக பேசி அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட முயற்சிக்கிறார். தலைமை செயலாளரை அழுகிய முட்டை என விமர்சிக்கிறார்.

புதுவை கவர்னர் கிரண் பேடியை பாகிஸ்தான் தூதராக மத்திய அரசு நியமிக்க வேண்டும். அவர் நேர்மையானவர் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதற்காக ஒரு அரசையே செயல்பட விடாமல் செய்வது நியாயமா?

இவ்வாறு அவர் கூறினார்.