political

கைரேகை மூலம் பணம் செலுத்தும் ‘பீம்-ஆதார்’ செயலியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாக்பூர்:
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. தொழில்நுட்பம் மூலம் செயல்படும் ‘பீம்’ உள்ளிட்ட பல அப்ளிகேஷன்கள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக, டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவதற்கு இன்டர்நெட் வசதி, டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்கள் தேவைப்படுகின்றன.
இந்நிலையில், ஏழை எளிய மக்களும் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தும் விதமாக, சட்டமேதை அம்பேத்கரின் 126-வது பிறந்த நாளான இன்று ‘பீம் – ஆதார்’ வசதியை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் கை ரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு, ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தலாம். முதற்கட்டமாக இந்த வசதியின் மூலம் 27 வங்கிகள் பணத்தை செலுத்தவும், பெற்றுக்கொள்ளவும் உள்ளன.
இதனிடையே, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான இரண்டு ஊக்கத் தொகை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பீம் செயலி மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைக்கு கேஷ்பேக் மற்றும் போனஸ் கிடைக்கும் என்றார்.
முன்னதாக, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு வருகை தந்த பிரதமர் மோடி கோரடி அனல் மின் நிலையத்தின் புதிய அலகுகளை திறந்து வைத்தார்.