political

ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதைவிட ஏலம் போட்டு விற்கலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

சென்னை:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தலில் இந்தியாவில் எங்குமே நடைபெற்றிராத அளவுக்கு முறைகேடுகள் அப்பட்டமாக அரங்கேற்றப்படுகிறது.

பண வினியோகம் ஒளிவு மறைவாக நடக்கவில்லை, வெளிப்படையாகவே நடக்கிறது. துணை ராணுவம், போலீஸ், தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

தெருவுக்கு தெரு அமைச்சர்கள், வெளியூர்காரர்கள் அமர்ந்து பொது மக்களை மிரட்டுவது போல் நிற்கிறார்கள். தேர்தல் ஆணையம் முறையாக தேர்தலை நடத்த விரும்பினால் வெளியூர்க்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையம் உலக அளவில் பெயர் பெற்றது. பல நாடுகளுக்கு சென்று தேர்தல்களை நடத்தும் முறையை சொல்லிக் கொடுத்துள்ளன.

ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு தேர்தலை நடத்துவதைவிட தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதியை ஏலம் போட்டு விற்றுவிடலாம். ஏலம் என்றைக்கு நடைபெறும் என்பதை முன் அறிவிப்பு செய்து ஏலம் விடலாம்.

தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததற்காக அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அந்த சோதனையிலும் தவறு நடந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால் சோதனை நடந்து கொண்டிருந்த போது அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோரை எப்படி உள்ளே அனுமதித்தார்கள். சோதனை நடந்த போது ஒருவர் ஆவணங்களை தூக்கிக் கொண்டு ஓடுகிறார். மடியில் கனம் இல்லை என்றால் ஏன் ஓட வேண்டும்.

 

அமைச்சர்கள் உள்ளே செல்லாமல் இருந்திருந்தால் சோதனை தடங்கல் இல்லாமல் நடந்திருக்கும்.

மத்தியப்பிரதேசத்தில் இதேபோல் தேர்தல் தில்லு முல்லுவில் ஈடுபட்ட அமைச்சர் ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சரியில்லை. இதேபோல் மோசமான நிர்வாகம் வேறு எந்த மாநிலத்திலும் இருக்காது. அ.தி.மு.க.வின் இரு அணிகள், தி.மு.க. ஆகிய 3 கட்சிகளும் சராசரியாக ஒரு வீட்டுக்கு 1 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட மட்ட ரகமான தேர்தலை எந்த மாநிலத்திலும் பார்த்திருக்க முடியாது.

ஒவ்வொரு கட்சியும் தங்கள் மீதுள்ள தவறுகளை திசை திருப்ப எதற்கெடுத்தாலும் பின்னணியில் பாரதிய ஜனதா இருக்கிறது என்று குற்றம் சுமத்துகின்றனர்.

தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை போன்றவை எல்லாம் தனி அதிகாரம் படைத்த அமைப்புகள். அவைகளுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசின் தூண்டுதல்படியே நடக்கிறது என்றால் மத்தியபிரதேசத்தில் மந்திரி கைதாகி இருப்பாரா?

இந்த கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் தான் உணர வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. அடுத்த கட்டமாக தங்க காசுகள் வினியோகம் செய்யப்பட இருப்பதாக செவிவழி செய்திகள் வருகின்றன. இன்னும் என்னவெல்லாம் அரங்கேறப் போகிறதோ தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

About the author

Julier