political

டெல்லியில் தமிழக விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்: கெஜ்ரிவாலிடம் ஆதரவு கோரினர்

புதுடெல்லி:

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என் பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறது.

மரத்தில் ஏறி போராட்டம், பாம்பு கறி, எலிக்கறி உண்ணும் போராட்டம் என தினமும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று 24- வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இன்று நடந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் முக்காடு அணிந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்காமல் முக்காடு போட்டதால் நாங்கள் இன்று முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனிடையே போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி செல்லும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு , ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு வலியுறுத்தினார். ஏற்கனவே தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதும் ஆம் ஆத்மி கட்சியினர் பெருமளவில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து விட்டு போராட்ட களத்திற்கு வந்த அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினோம். அவர் எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்காக நிச்சயம் விவசாயிகளின் கஷ்டங்கள் குறித்து எடுத்துரைப்பேன் என்று தெரிவித்தார்.

பிரதமர் எங்களை எப்படியும் சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை எங்களது போராட்டம் தொடரும். இல்லையென்றால் இங்கேயே சமாதி ஆகிவிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய தலைவர்களையும் விவசாயிகள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் போராட்டம் மேலும் வலுப்பெறும் என தெரிகிறது.

About the author

Julier