political

நெடுவாசல் போராட்டம் குறித்து 8-ந்தேதி ஆலோசனை கூட்டம்

 புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்ட தொடர் போராட்டம் நடந்தது.

இதில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பின.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் உறுதிமொழியை ஏற்று 3 கிராமங்களிலும் பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என்று உறுதிமொழியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரும் எழுத்துப்பூர்வமாக போராட்டக்குழுவிடம் ஒரு கடிதம் அளித்தார். அதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காது என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த 27-ம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுவாசல் கிராம பொதுமக்கள் மத்திய அரசு இந்த திட்டத்தை மீண்டும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். மேலும் இன்று நெடுவாசலை சுற்றி உள்ள 100 கிராம மக்களை ஒன்று திரட்டி ஆலோசனை கூட்டம் மூலம் போராட்டத்திற்கான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் இன்று நடத்தப்பட இருந்த ஆலோசனை கூட்டம் 8-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்ட குழுவினர் நேரில் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், சுவரொட்டிகள் ஒட்டியும் கிராம மக்களை நேரில் அழைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.

இதனால் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாற உள்ளது.