political

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பரிசு பொருட்கள் பட்டியல்

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணப் பட்டுவாடா மட்டுமின்றி பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுப் பொருட்களை ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக கொண்டு சென்று கொடுப்பதற்கு பதில் “டோக்கன்” முறையை கையாள்கிறார்கள். அந்த டோக்கனை வாக்காளர்கள் குறிப்பிட்ட சில கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்கிறார்கள். காதும், காதும் வைத்தது மாதிரி மிகவும் ரகசியமாக, ஆனால் மிக சாதுரியமாக இந்த பரிசுப் பொருட்கள் கை மாறுகிறது.

கடந்த வாரம் ஆர்.கே.நகரில் உள்ள குறிப்பிட்ட பகுதி பெண் வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கு, குத்து விளக்குகள் வழங்கப்பட்டது. சில பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சில்வர் பாத்திரங்கள், காமாட்சி விளக்குகள் போன்றவற்றை சில பகுதியினர் விரும்பவில்லை. அத்தகைய வாக்காளர்களுக்கு “கிப்ட் வவுச்சர்” வழங்கப்படுகிறது. அதை வைத்து வாக்காளர்கள் தங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் வாஷிங்மெஷின், பிரிட்ஜ் போன்றவற்றையும் வாக்காளர்களுக்கு பரிசாக கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த பரிசுகள் வினியோகத்திலும் புதுமையான முறை கையாளப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அந்த கட்சியைச் சேர்ந்த வெளியூர் நிர்வாகிகள், ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ஆங்காங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதி மக்களுடன் நெருங்கி பழகியுள்ளனர்.

அவர்கள்தான் இப்போது வீடு, வீடாக சென்று, உங்க வீட்டுக்கு என்ன வேணும்? வாஷிங்மெஷினா அல்லது பிரிட்ஜ்ஜா…. என்று கேட்டு, கேட்டு வாங்கிக் கொடுக்கிறார்கள். இவை மொத்தமாக செல்லாமல் தனி தனியாக வினியோகிக்கப்படுவதால் பறக்கும் படையினரால் தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், வருமான வரித்துறையினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சென்னையின் பிற பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து வாஷிங்மெஷினும், பிரிட்ஜும் வரவழைக்கப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு தொகுதியில் இருக்கும் 4 திருமண மண்டபங்களிலும் பரிசுப் பொருட்கள் ரகசியமாக குவித்து வைக்கப்பட்டுள்ளதாம்.

அங்கிருந்து ஒரு தடவை 10 வீடுகளுக்கு மட்டும் பரிசுப் பொருட்களை எடுத்து வந்து கொடுக்கிறார்களாம். இது தேர்தல் அதிகாரிகளை தவிக்க வைத்துள்ளது.