political

ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு வந்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, வாணக்கன்காடு, கோட்டைக்காடு, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகளில் ஓ.என். ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் அமைத்து ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க ஆய்வு மேற்கொண்டது.

இதையடுத்து நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இத்திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு பகுதியில் போராட்டம் வெடித்தது. பேச்சு வார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டு தற்போது மீண்டும் நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோட்டைக்காடு பகுதியில் உள்ள ஓ.என். ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ்துளை கிணற்றில் ஆய்வு மேற்கொள்ள கெய்ராஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று வந்தனர். ஓ.என்.ஜி.சி. அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்யும் ஒப்பந்தத்தை கெய்ராஸ் பெட்ரோலியம் நிறுவனம் எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் கெய்ராஸ் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் வந்தனர்.

இந்த தகவல் பரவியதும் கொந்தளித்த அப்பகுதி மக்கள் ஆய்வுக்கு வந்த தனியார் நிறுவன அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலீப் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் அதிகாரிகளை மீட்டு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் சப்-கலெக்டர் அம்ரீத் மற்றும் போலீசார் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆந்திராவை சேர்ந்த கெய்ராஸ் பெட்ரோலியம் என்ற தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் என தெரிய வந்தது.

இதனையடுத்து சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கோட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் ஆகியோரை அழைத்து சப்-கலெக்டர் அம்ரீத் விசாரணையில் கிடைத்த தகவல்களை தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் தனியார் நிறுவன அதிகாரிகளிடம் இங்கு வரும்போது மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-கலெக்டர் அம்ரீத் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கெய்ராஸ் பெட்ரோலியம் என்ற தனியார் நிறுவனம் இந்தியா முழுவதும் மத்திய எண்ணெய் நிறுவனம் போட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை பராமரிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகளை இந்த தனியார் நிறுவன அதிகாரிகள் சில மாதங்களுக்கு ஒரு தடவை ஆய்வு நடத்தி சோதனை செய்வார்கள். அதன் அடிப்படையில் நேற்று ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் காலை 11 மணி அளவில் கோட்டைக்காடு சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்து மக்கள் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாங்கள் விசாரணை செய்தோம். இனிமேல் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் நீங்கள் இதுபோன்ற சோதனைக்கு இங்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளோம். மேலும் இது குறித்து மத்திய எண்ணெய் நிறுவனத்திடமும் நாங்கள் தெரிவிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.