political

“டெல்லி போராட்ட பின்னணியில் பச்சையும் இல்லை… காவியும் இல்லை!” -அய்யாக்கண்ணு

விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தினர் போராட்டம் நடத்திவருகின்றனர். ஒரு மாதத்தைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில், எலிக்கறி தின்றும், பிச்சைப் பாத்திரம் ஏந்தியும், மொட்டை அடித்தும் எனப் பல்வேறு விதங்களில் விவசாயிகள் தங்களது நிலைமையை எடுத்துரைத்துப் போராடி வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி திடீரென நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டது நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி அலுவலகம் எதிரே நடந்த இந்த நிர்வாணப் போராட்டம் அனைவர் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, “நிர்வாணம் ஆனது விவசாயிகள் அல்ல… மத்திய அரசின் செயல்பாடு” என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். இதனிடையில், தற்போது திடீரென விவசாயிகள் தங்களது போராட்டத்தை இரண்டு நாட்களுக்குத் தள்ளிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகத் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அய்யாகண்ணுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

”போராட்டத்தைத் தள்ளிவைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறதே?” 

“மனிதனுடைய சிறுநீரைக் குடிக்கிற நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை மத்திய அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று (20-04-17) சிறுநீரைக் குடிக்கும் போராட்டத்தை நடத்த இருந்தோம். நிதியமைச்சகத்தில் இருந்து எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாகக் கடிதம் தருவதாகக் கூறியிருந்தார்கள். அதன் காரணமாகப் போராட்டத்தை ரத்து செய்துவிட்டு இங்கேயே காத்திருப்புப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.”

 

அய்யாகண்ணு

”எலிக்கறி தின்றும், பிச்சைப் பாத்திரம் ஏந்தியும், மொட்டை அடித்தும் எனப் பல்வேறு விதங்களில் போராட்டம் நடத்தி வருகிறீர்கள். இதுவரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லையே?”

”1970-ம் ஆண்டு ஒரு டன் கரும்பு 90 ரூபாய். அப்போது ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு 90 ரூபாய் சம்பளம் வழங்கியது அரசு. தற்போது, அதே ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் 36 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது இந்த அரசு; 400 மடங்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது. ஆனால், விவசாயிகள் விளைவிக்கிற ஒரு டன் கரும்புக்கு 2,300 ரூபாயைத்தான் விலையாக நிர்ணயிக்கின்றன மத்திய – மாநில அரசுகள். ஏசியில் உட்கார்ந்து பணியாற்றுபவர்களுக்கு 100 ரூபாய் கொடுக்கும்போது வெயிலில் வேலை செய்பவர்களுக்கு 25 ரூபாய் கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்குக் கொடுப்பது போன்று விவசாயிகளுடைய விளைபொருட்களின் விலையை உயர்த்திக்கொடுத்தால் அவர்களும் வரி கட்டுவார்கள்; பிச்சைக்காரர்கள்போல் கடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க மாட்டார்கள்? ஆனால், மத்திய அரசு விவசாயிகளை இரண்டாந்தர குடிமக்களாகத்தான் பார்க்கிறது. தேர்தல் வந்தால் விவசாயிகளை இந்த நாட்டின் முதுகெலும்பாகவும் தேர்தல் முடிந்துவிட்டால் இந்த நாட்டின் அடிமைகளாகவும் நினைக்கிறது அரசாங்கம்.”

”என்ன நிலைப்பாட்டில் மத்திய அரசு இருக்கிறது என்பதாவது தெரிகிறதா?” 

“மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஊருக்குச் செல்லுங்கள். அதில், சிலர் மட்டும் என்னுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள். அடுத்த 15 நாட்களில் நிதித்துறை அமைச்சகத்துடன் பேசித் தீர்வு காண்கிறேன்’ என்றார். அதற்கு நாங்கள், ‘இங்கேயே தங்கியிருக்கிறோம். நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துங்கள்’ என்று சொன்னபோது, ‘இல்லை… நீங்கள் ஊருக்குப்போனால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்’ என்றார். இது, எதைக் காட்டுகிறது எனத் தெரியவில்லை.”

விவசாயிகள் போராட்டம்

”போராட்டத்துக்கு இதுவரை மத்திய அரசு எந்தப் பதிலும் சொல்லவில்லை.தொடர்ந்து போராட்டத்தை நடத்தக்கூடிய அளவுக்கு வலிமை இருக்கிறதா?” 

”வறட்சி நிவாரணம், வங்கிகளில் வாங்கிய கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை மத்திய அரசு எங்களுடைய போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. அதனால் போராட்டத்தில் இருப்பவர்கள் யாரும் சோர்ந்துபோகவில்லை. சாகும்வரை எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.”

” ‘விவசாயிகள் போராட்டம் உள்நோக்கமுடையது’ என்று சொல்லப்படுகிறதே?”

”இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்; பிறகு, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் போராட்டத்தை நடத்துகிறது என்கிறார்கள்; அத்வானியின் கையாளாக இருப்பதால்தான் மோடியை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்கிறார்கள். இப்படிக் கட்டுக்கதைகளைக் கட்டிவிடும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்தப் போராட்டத்துக்குப் பின்னால் ஏழை விவசாயியின் பசி மட்டுமே உள்ளது என்பதை உறக்கச் சொல்கிறேன்.”