political

தலாய்லாமா பயணம் இருநாடுகளிடையே பதற்றத்தை தூண்டுகிறது: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

பீஜிங்:
திபெத் புத்தமத துறவி தலாய் லாமா அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் அருணாச்சல பிரதேசம் வந்தார். அங்கு மதபோதனை செய்து வருகிறார்.
தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, பயணத்தை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணம் இந்தியா உடனான உறவை கடுமையாக பாதித்துள்ளது என்று நேற்று சீனா தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தலாய்லாமா பயணம் மேற்கொண்டுள்ளது இரு நாடுகளிடையே பதற்றத்தை தூண்டுகிறது என்று இந்தியா மீது சீனா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங், “இந்த விவகாரத்தில் பீஜிங் மற்றும் புதுடெல்லியில் சீனா தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் சீனாவிற்கான அதிகாரி விஜய் கோகலேவிடமும், புதுடெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.
தலாய்லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு இந்தியா அனுமதித்திருப்பது இருநாடுகளிடையேயான உறவை பாதித்துள்ளது. சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க தலாய்லாமாவிற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது போல் ஆகிவிடும் என்பதால் நாங்கள் எதிர்க்கிறோம்.” என்றார்.