Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: அமெரிக்கா எச்சரிக்கை

நியூ யார்க்:
அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி விசா’ வழங்கி வருகிறது. இந்த விசாக்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுவோர் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.
ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதும், இந்த எச்-1பி விசா நடைமுறைகளில் கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்தார்.
இந்த விசாவை பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பளத்தை 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சத்து 40 ஆயிரம்) அதாவது இரு மடங்காக உயர்த்துவதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குறைந்த சம்பளத்திற்காக இந்தியா உள்ளிட்ட பிறநாட்டு ஊழியர்களைக் கொண்டு அமெரிக்கர்களை நிறுவனங்கள் வெளியேற்றி வரும் விவகாரம் முடிவுக்கு வரும் என கருதப்பட்டது. இந்தியாவில் இருந்து ஐ.டி. வேலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அந்த ஐ.டி. வேலைகள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கே கிடைக்கும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.
இந்த நிலையில், எச்-1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தி அமெரிக்க பணியாளர்களுக்கு ஓரவஞ்சனை செய்யக்கூடாது என்று அந்நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகம் ஏற்படும் வகையில், நிறுவன உரிமையாளர்கள் எச்-1பி விசா நடைமுறைகளில் முறைகேடுகளை செய்வதை நீதித்துறை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அமெரிக்காவின் தற்காலிக துணை அட்டார்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அடுத்த நிதி ஆண்டுக்கான எச்-1பி விசாக்களை அரசு ஏற்றுக்கொள்ள துவங்கியிருக்கும் நிலையில் மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Exit mobile version