political

இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராகும் டிரம்ப்

 

நியூயார்க்:

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக ஐ.நா. சபை தொடர்ந்து கவலை தெரிவித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் கூறி வருகிறது.

இந்நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று பத்திரிகையளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முயற்சி மேற்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நிக்கி ஹாலே, “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதட்டம் குறித்து இந்த நிர்வாகம் (டிரம்ப்) கவலை தெரிவித்துள்ளது. எந்த பிரச்சினையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி பதட்டத்தை தணிக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.

பேச்சுவார்த்தையில் (டிரம்ப்) நிர்வாகம் பங்கேற்கும் என்றும், பேச்சுவார்த்தையில் தனது இடத்தை விரைவில் முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கிறேன். எதாவது நடக்கும்வரை நாம் காத்திருக்க வேண்டும் என நினைக்கவில்லை. பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போவதால், பேச்சுவார்த்தையில் ஒரு அங்கமாக நாங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அமைதி பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என நினைக்கிறேன். அதிபர் பங்கேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றார்.