Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

சிறுமி பலாத்கார வழக்கு: அமெரிக்காவில் 14 வயது சிறுவன் கைது

வாஷிங்டன்:

அமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை 5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில் பலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’) நேரடியாக காட்டிய சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார். அந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச படம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.

இது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில், “பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு எட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும் ஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார் 40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள் தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக மிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம், இடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version