Science

பூமியைக் காக்கும் பின்லாந்து!

10 ஆயிரம் ஆண்டு காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பூமி வெப்பமாகி வருவதைத்தான் குளோபல் வார்மிங் என்கிறார்கள். ‘உலகம் சூடாகி வருவது என்னவோ உண்மைதான். ஆனால், அது இயற்கையாக ஏற்படுவது’ என்று ஒரு சிலர் சொல்ல,  ‘அப்படி அல்ல… இது மனிதன் ஏற்படுத்திய வெப்பம்தான்’ என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்து வருகிறார்கள். ‘குளோபல் வார்மிங் என்ற பிரச்னை இல்லவே இல்லை’ என்று சொல்வோரும் உண்டு.

உண்மை என்ன?

‘கிரீன் ஹவுஸ் கேஸஸ்’ எனப்படும் வெப்ப வாயுக்களை தொழிற்சாலை மற்றும் வாகனங்களின் மூலம் வானில் ஏவுவது, எண்ணெய்க் கிணறுகளிலிருந்து எரியும் இடை விடாத தீ, உலகின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேஸான் காடு உள்பட பல காடுகளை வேகமாக அழிப்பது போன்ற பல மோசமான காரியங்களால் பூமியின் குளிர்நிலையைச் சமன் செய்யக்கூடிய துருவப் பிரதேசங்களின் பிரமாண்டமான பனி அடுக்குகள் உருகி வருகின்றன. இதனால் உலகின் வானிலை ஏடாகூடமாக மாறி வருகிறது.

கிளிமஞ்சாரோ, இரியன் ஜெயா, ஃபியூஜி, இமயமலை போன்ற பனிமலைகளும் வேகமாக உருகி வருவது கவலைக்கு உரியது. இதன் முதல் விளைவு… அதிக மழை, புயல், வெள்ளம் போன்றவை.  அதற்குப் பின்னாலேயே வறட்சியும் கடுமையாக பாதிக்கும். சுருக்கமாகச் சொன்னால் குறுகிய குளிர்காலம், நீண்ட கோடை என்பதுதான் குளோபல் வார்மிங் தரப்போகும் தன்டனை.

ஏரி காத்த ராமர் கதை தெரியும்தானே? அது புராணக்கதை. இப்போது நிஜமாகவே பூமியை காத்து வருவது ஃபின்லாந்தின் பனி அடுக்குகள்தான். அவையும் உருக ஆரம்பித்தால் பூமித்தாயின் கோபத்தை நம்மால் தாங்க முடியாது. உலகிலேயே அதிகமான வெப்ப வாயுக்களை வெளியேற்றும் நாடு அமெரிக்கா. உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட மறுத்து வரும் நாடும் அதுதான்!