விளையாட்டு அரங்கில் இந்தியா இன்னும் ஜொலிக்கவில்லையே என்ற குறை இந்திய மக்களுக்கு இருக்கிறது. அதிலும், ஒவ்வொரு முறையும் ஆசிய விளையாட்டுப் போட்டி என்றாலும் சரி, ஒலிம்பிக் போட்டி என்றாலும் சரி, வெற்றிபெற்ற நாடுகளின் பதக்க பட்டியலைப் பார்க்கும் நேரத்தில் எல்லாம் வேதனையாக இருக்கும். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும், இனி நாட்டில் விளையாட்டு வளர்ச்சிக்காக தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று விளையாட்டு சங்கங்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் ஏன் அரசாங்கமே ஆணி அடித்ததுபோல சொல்வதுண்டு. அடுத்து சில நாட்களில் இந்த பேச்சு கிணற்றில் விழுந்த கல்லாகி, மீண்டும் அடுத்த போட்டியின் பதக்க பட்டியல் வரும் போதுதான் தொடங்கும். இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை வளர்க்கும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஒலிம்பிக் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தால் தான் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும், விளையாட்டு வீரர்களுக்கும் உற்சாகம் ஏற்படும், உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும். இந்தியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடந்துள்ளன. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடந்தபோது, டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்கள் இந்தியாவை தலை குனிய வைத்துவிட்டது.
ஒலிம்பிக் போட்டி தொடங்கி இதுவரையில் 27 போட்டிகள் நடந்துள்ளன. ஒரு ஒலிம்பிக் போட்டி கூட இந்தியாவில் நடக்கவில்லையே என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. 2016–ல் பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிராவில் இந்த போட்டி நடக்கிறது. 2020–ல் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் நடக்கிறது. 2024–ம் ஆண்டு எங்கு நடத்துவது? என்பதற்கான தேர்வு தொடங்கப்போகும் நிலையில், இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி கோரப்போவதாக செய்திகள் வருவது ஒவ்வொரு இந்தியனையும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது. இந்த மாதத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் இந்தியாவுக்கு வருகிறார். அவர் பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவரிடம் 2024–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை ஆமதாபாத் நகரில் நடத்த மோடி கோரப்போகிறார். இதற்கான வேலைகளை மத்திய அரசாங்க விளையாட்டுத்துறை செயலாளர் அஜித் மோகன் ஏற்கனவே தொடங்கிவிட்டார். அவர்தான் சில நாட்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்து சென்று சர்வதேச ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்திவிட்டு, தாமஸ் பாச்சையும் இந்தியாவுக்கு வர அழைத்து இருக்கிறார். 2024–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தவேண்டும் என்று இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, கென்யா, மொரக்கோ, கத்தார், பிரான்சு, ரஷியா ஆகிய நாடுகள் முஸ்தீபாக இருக்கிறது.
இந்த போட்டியை எப்படியும் இந்தியாவில் நடத்தியே தீரவேண்டும் என்ற முயற்சியில் மோடி தீவிரமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி நடத்த ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் செலவாகும், வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த செலவு தேவையா? என்ற விமர்சனங்கள் வரும். ஆனால், இந்த போட்டியை நடத்தினால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை, ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சமும் பெருமையால் விம்மும். இதுமட்டுமல்லாமல், இதற்காக அமைக்கப்படும் சர்வதேச தரத்தினாலான உள்கட்டமைப்பு வசதிகளால் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாவதற்கான பயிற்சிகளை அளிக்கமுடியும். மேலும், அதன்பிறகு உலகின் பார்வை இந்தியா பக்கம் திரும்பும் என்ற வகையில் சுற்றுலா மேம்படும், பல முன்னேற்றங்களுக்கு வித்திடும் என்ற வகையில் எப்படியும் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தவேண்டும் என்ற மோடியின் முயற்சி வெற்றிபெற ஒவ்வொரு இந்தியனும் வாழ்த்துகிறான்.