பணிவு
‘‘சார்ந்து இருக்க என்றால்
சர்வதுக்கும் தாழணுமே
ஓர்ந்து இருக்க என்றால்
ஒருவர் பகை ஆகாதே!’’
எல்லோருடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அனைவருடனும் பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். ஒருவரோடு கூட பகைமை பாராட்டாமல் இருந்தால் மட்டும்தான், புரிந்து வாழ்கிறோம் என்று பொருளாகும்.
–அய்யா வைகுண்டர்.
துன்பம்
இறைவன் சூரியனாக இருக்கிறான். பெண்ணும், பொன்னும் சூரியனை மறைத்து திரைபோடும் மேகங்கள். இந்த மேகங்கள், சூரியனை பார்க்கவிடுவதில்லை. மேலும் அவை வாழ்க்கையை துன்பகரமானதாக ஆக்கிவிடும். நீங்கள் இறைவனிடம் சரண்புகுந்து விடுங்கள். உங்கள் முன்பாக திரைபோட்டுள்ள மேகங்கள் விலகிவிடும்.
–ராமகிருஷ்ணர்.
மவுனம்
எண்ணமில்லாது இருக்கும்போது உலகப் பொது மொழியாம் மவுனத்தால், நாம் ஒருவர் மற்றொருவரைப் புரிந்து கொள்கிறோம். பல ஆண்டுகள் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாததை உடனே மவுனத்தின் மூலம் புரிய வைக்கலாம். இதற்கு தட்சிணாமூர்த்தி சிறந்த எடுத்துக்காட்டு. மவுனமே மிக உயர்ந்ததும், மிக பயன்தருவதுமான மொழியாகும்.
–ரமணர்.