ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளில்அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடைய முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்று சிறையவை சிற்றாறுகள் என்று அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.
ஆறு நீர்வட்டதில் ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக மழை வீழ்ச்சி போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.