முன்பெல்லாம் நம் முன்னோர் வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருப்பார்கள். இதுவே ஒரு நச்சு நீக்கும் வழிமுறைதான். இந்த அவசர காலகட்டத்தில் விரதம் இருக்க யாருக்கும் நேரம் இல்லை. எங்கே பார்த்தாலும் ஃபாஸ்ட் புட் கலாச்சாரம்தான். மசாலா பொருட்களையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்கிறோம். இப்படி சமச்சீர் இல்லாத உணவுப்பொருட்களை உண்பதால்தான் தேவையில்லாத பொருட்களெல்லாம் நம் உடம்பில் சேர்ந்து நச்சாக மாறிவிடுகிறது. இந்த நச்சுக்கள் முதலில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன. பிறகு, நச்சுக்களின் வகைக்கு ஏற்ப நோய்களாக நம் உடலில் உருவாக ஆரம்பிக்கின்றன.
நம் உடலில் சேரும் தேவையில்லாத நச்சுக்களை கரைக்கும் தன்மை காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் உண்டு. சிட்ரஸ் பழங்களில் குறிப்பாக ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சையில் இருக்கும் சிட்ரஸ்பெக்டின் என்ற பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
மாதுளம் பழத்திற்கு புண்களை குணமாக்கும் தன்மையும் பப்பாளிக்கு அல்சரை குணமாக்கும் தன்மையும் உண்டு. பழங்களின் ராஜா என்று சொல்லப்படும் வில்வபழம், எலுமிச்சை, பெரிய நெல்லிக்காய் போன்றவற்றிற்கு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை அதிகம்.
குளோரோஃபில் அதிகமுள்ள பச்சை காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரைவேக்காடு வேகவைத்த கீரைகள், சிறிய வெங்காயம், கத்தரிக்காய், பாகற்காய் போன்ற போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வழக்கமாக குடிக்கும் டீயில் பால், சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து சாப்பிடலாம். அருகம்புல் கஷாயம், பால் கலக்காத டீ இந்த இரண்டும் உடலில் சேர்ந்துவிடும் தேவையில்லாதவற்றை நீக்கும் குணம் கொண்டவை.
வெற்றிலை போடுவதும்கூட இதற்கு சிறந்த முறைதான்.
எப்போதும் நாம் சாப்பிட்ட பிறகுதான் பழங்களை எடுத்துக்கொள்வோம். ஆனால் சாப்பிடுவதற்கு முன்புதான் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் நச்சுக்களை சேராமல் தடுக்க முடியும்.