Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

நம்ம அடுத்தவங்களுக்கு என்ன பன்றமோ அது தான் நமக்கும் நடக்கும்-கவனம் தேவை

ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன.

தங்க நிற மீனுக்கு, தான் அழகாய் தங்கம் போல் மினுமினுப்பாய் இருப்பதால் கர்வம் அதிகம். கெளுத்தி மீனிடம் நட்பாக இருந்தாலும் அடிக்கடி அதன் தோற்றத்தைக் கண்டு கேலி செய்யும்.

ஒருநாள், தங்க மீன் மிக ஆனந்தமாய் நீரில் குதித்துக் குதித்து கும்மாளமடித்தது. அப்போது அந்தப் பக்கம் கெளுத்தி மீன் வந்தது. அதைப் பார்த்ததும் தங்க மீனுக்கு குஷி அதிகமாகிவிட்டது.

“ஹாய்… இன்றும் என் அழகைப் பார். என் மினுமினுப்பைப் பார்; வசீகரத்தைப் பார். நாளுக்கு நாள் என் மெருகு எப்படி கூடிக் கொண்டே போகிறது பார். உலகில் என் போன்ற அழகிய மீன் எங்கு இருக்க முடியும்? ஹூம்… இறைவன் உன்னையும்தான் படைத்திருக்கிறானே… அவலட்சணமாய், கறுமை நிறத்தில் சொரசொரப்பாய்… என்ன பிறவியோ நீ… இந்தக் குளத்தில் என்னைப் போல் வேறு யாரும் இல்லாததால் உன்னுடன் பழகவேண்டிய சூழ்நிலை. எல்லாம் என் தலையெழுத்து” என்றது.

“தங்க மீனே! நம்மையெல்லாம் படைத்தது இறைவன். உன்னை இத்தனை அழகாய் படைத்ததற்கும், என்னை இத்தனை அவலட்சணமாய்ப் படைத்ததற்கும் ஏதேனும் வலுவான காரணம் இருக்கும். அதனால் இறைவனுடைய செயலைக் குறை சொல்லாதே. என் தோற்றம் இப்படி இருக்கிறதே என்று எண்ணி என்றுமே நான் கவலைப்பட்டதில்லை. எனக்கு இந்த உடலமைப்பே போதும். ஆனால், ஒரு விஷயம்… உனக்கு பெருமை அதிகமாகிவிட்டது. இது நல்லதல்ல. பெருமை உள்ளவர்களை கடவுள் எதிர்த்து நிற்பார்.விரைவில் உனக்குப் பாடம் கிடைக்கும்!” என்று அமைதியாகச் சொன்னது .

“சரிதான்! இது உன் இயலாமையின் வெளிப்பாடு. நிச்சயம் உன்னை உனக்குப் பிடிக்கவில்லை. அதனால் பிடித்தது போல் எதையோ சொல்லி சமாளிக்கிறாய். சரிவிடு. சில சமயங்களில் உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. சரி…சரி… உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதால் என் மகிழ்ச்சி கெடுகிறது. நான் வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்துத் திரும்பி, ஆனந்தமாகப் பாட்டுப் பாடியபடி நீரின் மேற்பரப்புக்குச் சென்றது.

திடீரென்று, தன்னை யாரோ கவ்விப் பிடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு, நிமிர்ந்து பார்த்தது.

ஒரு கொக்கின் அலகில் அது சிக்கிக் கொண்டிருந்தது.

“ஐயோ! கொக்கு!” என்று அலறியது தங்க மீன்.

“ஆமாம்! கொக்குதான். என் வாழ்நாளில் உன்னைப் போன்ற அழகிய மினுமினுப்பான மீனை நான் பார்த்ததே இல்லை. குளத்தின் ஆழத்திலேயே என்னமாய் ஜொலிக்கிறாய்; பிரமாதம். இன்று எனக்கு நீ அற்புதமான விருந்து!” என்று கரகர குரலில் பேசியது கொக்கு.

“ஐயோ! என்னை விட்டுவிடு!” என்று சொல்லிக் கதறித் துடித்தது தங்க மீன்.

“விட்டுவிடவா? அடப் பைத்தியமே!” என்று அதைக் கொத்தி தின்றது.

அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கெளுத்தி மீன், “தங்க நிற மினுமினுப்பால் தலைக்கணம் பிடித்துத் திரிந்தாயே. அந்த மினுமினுப்பே இன்று உன் உயிருக்கு உலை வைத்துவிட்டது பார்த்தாயா? என்னுடைய அசிங்கமான கரிய நிறம் கொக்கின் பார்வையில் இருந்து என்னை தப்பிக்க வைத்துவிட்டது என்று சொல்லிவிட்டு”, குளத்தின் ஆழத்திற்குச் சென்றது கெளுத்தி மீன்.

நீதி : யார் நம்மை புன்படுதினாலும் அதை கண்டு வருந்த வேண்டாம். அதற்கான தண்டனயை அவர் பெறுவார்.

Exit mobile version