Technology

வீடியோ: ஓலா வீல்ஸ் – சந்து, பொந்துகளிலும் ஊர்ந்து செல்லலாம்: முழு தகவல்கள்

புதுடெல்லி:
ஓலா வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனத்தின் புதிய சேவைக்கான அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் ஓலா வீல்ஸ் சேவையை புதிய வீடியோ மூலம் அறிமுகம் செய்துள்ளார்.
ஓலா லேப்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள வீல்ஸ் குரல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்குகிறது. ஓலா செயலி மூலம் புதிய சேவையை இயக்க முடியும். ஒருவர் மட்டும் பயணம் செய்யக் கூடிய ஓலா வீல்ஸ் கொண்டு குறைந்த தூரமுள்ள இலக்குகளை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா ஸ்மார்ட்போன் செயலியில் மினி, ஓலா மைக்ரோ கேப்ஸ் பட்டன்களுக்கு அருகிலேயே புதிய ஓலா வீல்ஸ் பட்டன் விரைவில் இடம் பெறும். தற்சமயம் வரை பீட்டா பதிப்பில் இயங்கி வரும் இந்த சேவை கார்ப்பரேட் வியாபார பகுதிகளில் துவங்கி அதன் பின் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சோதனைகளில் இருப்பதால் ஓலா வீல்ஸ் பட்டன் செயலியில் பார்க்க முடியாது.
இன்னும் பயன்பாட்டிற்கு வழங்கப்படாத நிலையில் ஓலா வீல்ஸ் சேவை குறித்து பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்த தலைவர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஓலா ஏர் என்ற சேவையின் மூலம் ஹெலிகாப்டர்களையும் ஓலா வாடகைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.499 என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.