Technology

ஜியோ குற்றச்சாட்டு எதிரொலி: சிக்கலில் ஏர்டெல் விளம்பரங்கள்

புதுடெல்லி:
இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் என்ற பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் விளம்பரங்கள் முறைகேடாக உள்ளது என ஜியோ சார்பில் இந்திய விளம்பர கட்டுப்பாட்டு ஆணையத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இந்திய விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது.
அந்தவகையில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் விளம்பரங்களில் வரும் இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் (fastest network) என்ற வார்த்தையை மாற்றியமைப்பது அல்லது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனை ஏர்டெல் நிறுவனம் ஏப்ரல் 1-ந்தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் விளம்பரங்கள் பிரபல ஸ்பீடுடெஸ்ட் செயலியான ஊக்லா நடத்திய ஆய்வுகளை மையப்படுத்தியது என ஜியோவின் குற்றச்சாட்டுக்கு பாரதி ஏர்டெல் அளித்த பதிலில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஜியோ அளித்த புகாரில் ஊக்லா வழங்கும் விருதுகள் பணம் கொடுக்கும் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் ஊக்லா நடத்திய சோதனை வழிமுறைகள் ஜியோ நெட்வொர்க் முதல் சிம் கார்டு ஸ்லாட்களில் மட்டுமே வேகமாக இயங்குகிறது என்றும் இரண்டாவது ஸ்லாட்டில் ஜியோ டேட்டா வேகம் குறைவாக இருப்பதை போன்று முடிவுகளை வழங்கியுள்ளது. உண்மையில் எவ்வித ஸ்லாட்டிலும் ஜியோ சிம் வேகம் சீராக இருக்கும் என ஜியோ சார்பில் வழங்கப்பட்ட குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் குற்றச்சாட்டு பிரான்டிற்கு எதிரான அவதூறு கருத்து என்பதோடு இவை வாடிக்கையாளர்கள் மத்தியில் தவறான எண்ணோட்டத்திற்கு வழி செய்யும். இதோடு இன்று வரை இந்தியாவின் அதிவேக மொபைல் நெட்வொர்க் பாரதி ஏர்டெல் தான் என ஊக்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேமி ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.