டெல்லியில் நாளை முதல் அமல்படுத்தப்படவிருந்த வாகனக் கட்டுப்பாட்டு திட்டம் நேற்று திரும்பப் பெறப்பட்டது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக புகைப்பனி அதிகரித்து காற்று மாசுபாடு அபாய அளவில் உள்ளது. இதனால் நாளை (நவ. 13) முதல் வரும் 17-ம் தேதி வரை 5 நாட்களுக்கு (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) வாகனக் கட்டுப்பாடு முறை அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. இதன்படி ஒற்றைப்படை தேதியில் ஒற்றப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் இரட்டைப்படை தேதியில் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்பட இருந்தது.
இந்நிலையில் இத்திட்டத்தை டெல்லி அரசு மீண்டும் திரும்பப் பெறுவதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கலாட் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து அரசு இந்த முடிவுக்கு வந்தது. வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் இரு சக்கர வாகனங்கள், பெண்கள் மட்டுமே செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளித்திருந்தோம். ஆனால் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கக் கூடாது என தீர்ப்பாயம் கூறிவிட்டது. பெண்கள் பாதுகாப்புடன் சமரசம் செய்துகொள்ள எங்கள் அரசு தயாராக இல்லை” என்றார்.
முன்னதாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், “டெல்லியில் இனி ஒரு கன மீட்டர் காற்றில் பிஎம்2.5 துகள்களின் அளவு 300 மைக்ரோ கிராமை கடந்தாலும் பிஎம்10 துகள்களின் அளவு 500 மைக்ரோ கிராமை கடந்தாலும் வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்த வேண்டும். அவசர வாகனங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.