Uncategorized

அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை – சகோதரர் வருமான வரி அலுவலகத்தில் இன்று ஆஜர்

திருச்சி:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து நேற்று சென்னை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அவரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் உள்ள விஜயபாஸ்கர் அறை, சென்னை எழும்பூர் கெங்குரெட்டி சந்துப்பகுதியில் உள்ள அவரது உறவினர் வீடு, திருவல்லிக்கேணி உதவியாளர் நயினார் முகமது வீடு, கீழ்ப்பாக்கம் உதவியாளர் கல்பேஷ் வீடு என பல இடங்களில் சோதனை நடந்தது.

இதே போல புதுக்கோட்டை, இலுப்பூர் சவு ராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, விராலிமலை சாலையில் உள்ள ராசி தங்கும் விடுதி, மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள், அலுவலகம், திருவேங்கைவாசல் ரெடிமிக்ஸ் மற்றும் ராசி புளுமெட்டல்ஸ் கல்குவாரி, திருமயம் நச்சாந்துப்பட்டியில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர் வீடு ஆகிய 7 இடங்களில் திருச்சி மத்திய மண்டல வருமான வரித்துறை இயக்குனர் ராமலிங்கம், இணை இயக்குனர் சதிஷ்மேரிஜா ஆகியோர் தலைமையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர்.

இந்த இடங்களில் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.4.50 கோடி கணக்கில் வராத பணம் மற்றும் ரூ.80 கோடி பணம் கையாளப்பட்டதற்காக ஆவணங்கள் ஆகியவை சிக்கியதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் நேற்று இரவு பெட்டிகளில் அடைத்து திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இன்று அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், மற்றும் உறவினர்கள், உதவியாளர்கள் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மேலும் சரிபார்க்கிறார்கள். இலுப்பூரில் உள்ள அமைச்சரின் வீட்டில் நகை இருந்த அறைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து விட்டனர்.

கைப்பற்றப்பட்ட சொத்து, ஆவணங்கள் குறித்தும், செலவு செய்யப்பட்ட பணம் விபரங்கள் குறித்தும் இன்று அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, சகோதரர் உதயகுமார் உள்ளிட்டவர்கள் திருச்சியில் உள்ள மத்திய மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கோவை வருமான வரித்துறை இணை இயக்குனர் சம்மன் அனுப்பினார்.

அதன்படி இன்று திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சரின் தந்தை சின்னதம்பி, சகோதரர் உதயகுமார் மற்றும் விஜயபாஸ்கரின் ஆடிட்டர் ஜெராமன் ஆகியோர் ஆஜர் ஆகினர். அவர்களிடம் வருமான வரித்துறை உதவி இயக்குனர்கள் செந்தில்குமார், யாசர்அராபத் ஆகியோர் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி கூறியதாவது:-

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சோதனை நடந்துள்ளது. இந்த சோதனையால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். நாங்கள் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.