Uncategorized

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
தேசிய வங்கிகளில் பெற்ற விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் புதுடெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறு குறு என்ற பாகுபாடின்றி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிபதி நாகமுத்து, முரளிதரன் அடங்கிய அமர்வு  உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போரின் நகை மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய அரசாணை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் 4 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று டெல்லியில் போராடி வரும் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.