ஒட்டாவா:
பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய். கடந்த 2012-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தலையில் பலத்த காயத்துடன் லண்டன் கொண்டு வரப்பட்ட மலாலா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர்பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.
கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் 19 வயதே ஆன மலாலா ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. உலகின் இளம் வயது நோபல் பரிசு வெற்றியாளரான மலாலா உலக அமைதி, கல்வி உரிமை உள்ளிட்டவற்றிற்காக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்பட்ட மலாலா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நேற்று (12.04.17) உரையாற்றினார். வரலாற்று சிறப்புமிக்க இந்த உரையில் அவர் பேசியதாவது.,
“தலைவராக விளங்க இளம் வயதான கனடா பிரதமர் போன்று இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.”
“என் சிறுவயதில் நான் தலைமை பதவி வகிக்க காத்திருந்தேன், ஆனால் ஒரு குழந்தையின் குரல் உலகம் முழுக்க ஒலிக்கும் என்பதை நான் கற்றுக் கொண்டேன்”.
“அடுத்த முறை நான் இங்கு வரும் போது இந்த அரங்கத்தில் பெரும்பான்மையான இளம் பெண்கள் கூட்டத்தை பார்க்க விரும்புகிறேன். கனடா ஆண்கள் அனைவரும் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கும் சமமான உரிமையை வழங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”.
இவ்வாறு அவர் பேசினார்.
சுமார் 18 நிமிடங்கள் பேசிய மலாலாவின் உரைக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது உறுப்பினர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.