History Leaders Story Tamil World

பார்வையற்றோர் உலகத்துக்கு ஒளிபாய்ச்சிய சிறுவன்!

ப்ரெயில் முறை பற்றி எல்லோருமே கேள்விப் பட்டிருப்போம். இதைக் கண்டுபிடித்தவர் லூயிஸ் ப்ரெயில் என்கிற பிரெஞ்சுக்காரர்.

நான்கு வயது சிறுவனாய் இருந்தபோது, செருப்பு தைக்கும் தனது தந்தையின் பெரிய ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த தடிமனான ஊசி அவர் கண்ணைக் குத்தி விட்டது. ஒரு கண் பார்வை போயிற்று. அந்தக் கண்ணில் உண்டான தொற்று சில மாதங்கள் கழித்து இன்னொரு கண்ணிற்கும் பரவி முழுப் பார்வையும் போய்விட்டது. பார்வை போய்விட்டாலும், படிக்க வேண்டும் என்ற ஆவல் அவரிடம் நிறைய இருந்தது. கண் பார்வை இழந்தவர்கள் படிக்க ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்தார். பலரிடமும் பேசினார். என்ன செய்யலாம் என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் போர் வீரர் ஒருவரிடம் பேசிய போது, ஒரு தகவல் கிடைத்தது. போரின் போது தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் முறை பற்றி சொன்னார் அந்தப் போர் வீரர். கையால் எழுதினால் விளக்கொளியில் தான் அதைப் படிக்க முடியும். விளக்கொளியை ஏற்றினால் எதிரிகள் இவர்களது இருப்பிடத்தை அறிந்து விடுவர். எனவே இருட்டில் தொட்டுப் பார்த்துப் படித்தறியும் முறையில் குறியீட்டு எழுத்துகளை அனுப்புவோம் என்று அந்த வீரர் கூறியதைக் கேட்ட லூயிஸ் தன் வீட்டுக்கு ஓடினார். எந்தக் குத்தூசி தன் கண்ணைக் குத்தியதோ அதே ஊசியை பயன்படுத்தி துளைகளைப் போட ஆரம்பித்தார்.

ஒரு தாளை எடுத்து அதன் மீது நெருக்கமாக ஆறு துளையிட்டார். தொட்டுப் பார்த்தார். இன்னொரு விதமாக 6 துளையிட்டு மறுபக்கத்தில் தடவிப்பார்த்தார். இந்த அமைப்பில் புள்ளிகளை வெவ்வேறு விதமாக வைப்பதன் மூலம் ஆங்கில எழுத்துக்களையும், அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளையும் உண்டாக்கினார். இப்படிதான் ப்ரெயில் முறை – இன்றும் பார்வையற்றோர் முனைவர் பட்டம் வரையில் படிக்க உதவும் முறை – அன்று தோன்றியது.

உலகமே பாராட்டிய இந்த முறைக்கு அவரது பெயரையே வைத்துவிட்டார்கள். உள்ளூர் தேவாலயத்தில் கீ-போர்டும், செல்லோ என்ற இசைக் கருவியும் வாசித்து வந்த லூயிஸ் இசையைக் கூட ப்ரெயில் மொழியில் எழுதும் முறையைக் கண்டுபிடித்தார். தனி ஒருவராக லூயிஸ் செய்த இந்த சாதனைக்கு நாம் எல்லோருமே அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.

Louis_Braille_by_Étienne_Leroux
லூயிஸ் ப்ரெயில்
லூயிஸ் சிறிது காலம் இந்த உலகத்தைப் பார்த்தார். அவருக்கு காது கேட்கும். அதனால் பிறருடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் பிறந்த இரண்டாம் வருடம் ஒரு நோய்க்கு தன் கண், காது முதலிய புலன்களை பறிகொடுத்த ஹெலன் கெல்லரைப் பற்றிப் பேசாமல் கண் பற்றிய இந்த மருத்துவக் கட்டுரை முழுமையடையாது.

பிறக்கும் குழந்தைகள் கண் வழியாக அம்மாவைப் பார்த்து, அவள் பேசும் மொழிகளைக் காதால் கேட்டுத்தான் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ளுகிறது, இல்லையா?

ஹெலன் கெல்லருக்கு ஒரு நல்ல ஆசிரியை கிடைத்தார். அவர் ஹெலனின் கையைப்பிடித்து அவரது உள்ளங்கையில் எழுத்துக்களை எழுதிக் காட்டுவார். அவர் கொடுத்த ஆதரவும், காட்டிய பரிவும் சேர, ஹெலன் மெல்ல மெல்ல எழுத்துக்களை புரிந்து கொள்ள ஆரம்பித்தார். மூன்றே வருடங்களில் ப்ரெயில் முறையில் எழுத்துக்களை தொட்டு அறியவும் எழுதவும் கற்றுக் கொண்டார்.

இப்போது ஹெலனின் கவனம் எப்படி பேசுவது என்பதில் திரும்பியது. ஒருவரைப் பேசச் சொல்லி, ஒரே நேரத்தில் நடுவிரலால் பேசுபவரின் மூக்கையும், ஆள்காட்டி விரலால் உதடுகளையும், கட்டைவிரலால் தாடையையும் தொட்டு உணருவார். ஒவ்வொரு வார்த்தை சொல்லும்போதும் இந்த அசைவுகளை கூர்மையாக கவனித்து புரிந்து கொள்ள ஆரம்பித்தார். இப்படியே வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். பிறவிக் குறையை தன் விடா முயற்சியால் வென்றார். இனி அடுத்தது என்ன? உலகத்தில் தன்னைப் போல எத்தனை மக்கள் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் உதவ நினைத்தார். ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார். அதற்கு ஆதரவு திரட்ட உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். சுமார் இருபத்தைந்து நாடுகளுக்குச் சென்று பேசினார். ஏராளமான புத்தகங்கள் எழுதினார். இரண்டாம் உலகப்போரில் கண்ணிழந்த போர் வீரர்களுக்கு, கண்ணில்லாமல் எப்படி வாழலாம் என்று சொல்லிக் கொடுத்தார். பார்வையிழந்தவர்களின், உடல் ஊனமுற்றவர்களின் தேவதையாக, அவர்களுக்கு ஊக்கமும், புத்துணர்வும், புது வாழ்வு வாழ வகைகளையும் காட்டிய ஹெலன் கெல்லர் தனது 88 வது வயதில் மரணம் அடைந்தார்.

இப்போது பார்வை இழந்தவர்கள் பலவகை வேலைகளை செய்ய முடியும். எல்லாத் துறைகளிலும் ப்ரெயில் புத்தகங்கள் வந்துவிட்டன