நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கணித்ததை விட பூமி குறைந்த அளவே வெப்பமடைந்திருந்ததன் காரணத்தை கண்டறிய முயன்ற விஞ்ஞானிகளுக்கு எரிமலைகள் பூமியை வெப்பமடைதலிலிருந்து காத்திருப்பது தெரியவந்தது.
பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிப்பது வெப்ப வாயுக்கள் எனப்படும் Green house gases தான். இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கி பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலையை படிப்படியாக அதிகரிக்கின்றன .இந்நிலையில், வெப்ப வாயுக்களால் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாறுதலை கட்டுப்படுத்தும் தன்மை எரிமலைகளிலிருந்து வெளியேறும் சில வாயுக்களுக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
எரிமலைகள் வெடிக்கும்போது வெளியேறும் குழம்பிலிருந்து வெளிப்படும் சல்ஃபர் டையாக்சைடு (Sulphur dioxide) வாயு பூமியிலிருந்து சுமார் 12 முதல் 20 மைல்கள் உயரத்தில் உள்ள வளிமண்டலத்தின் ஸ்ட்ரேடோஸ்ஃபெரிக் ஏரோசால் (stratospheric aerosol layer) அடுக்கிற்கு செல்கிறது. அங்கு ஏற்படும் வேதியியல் மாற்றங்களினால் சஃல்பர் டையாக்சைடு வாயு, சல்ஃப்யூரிக் அமிலம் (Sulphuric acid) மற்றும் நீர் ஆவியாக (water vapour) மாறுகிறது.
வளிமண்டலத்தில் இருக்கும் இந்த சல்ஃப்யூரிக் அமிலமும் நீர் ஆவியும், சூரிய வெப்பத்தை பிரதிபலித்து அதனை விண்வெளிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறது. சூரிய ஒளி வளிமண்டலத்தை அடையும் முன்பே இது நிகழ்ந்துவிடுவதால், வெப்ப வாயுக்களால் பூமி வெப்பமயமாதல் குறைக்கப்படுகின்றது.
எரிமலையின் இந்த செயல்பாடுகளினால் 2000 ஆம் ஆண்டு முதல் பூமி வேப்பமயமடைதல் 25 சதவீதம் குறைத்துள்ளது.