World

விளைச்சல் அபாரம்: முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா

குளுமைப் பிரதேசமாக அறியப்படும் ஆஸ்திரேலியா நாட்டுக்கு மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மாம்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. மாம்பழ சாகுபடியில் படிப்படியாக முன்னேறிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்குப் போக மிஞ்சியுள்ள மாம்பழங்களை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்நிலையில், நமது நாட்டில் ‘கனிகளின் ராஜா’ என்றழைக்கப்படும் மாம்பழங்களை முதன்முறையாக அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்களை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு மாம்பழ சீசன் ஓய்ந்த பின்னர் இந்தியாவில் விளையும் அல்போன்ஸா, கேசர் போன்ற உயர்வகை மாம்பழங்களை தங்களது நாட்டில் இந்தியா சந்தைப்படுத்திக் கொள்ள கொள்கை அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா நாட்டின் மாம்பழ வர்த்தக கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் கிரே குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஆஸ்திரேலிய நாட்டின் உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறையின் விதிமுறைகளுக்கு ஏற்ப, மரத்தில் விளையும் காலத்தில் இருந்து, பறித்து ஏற்றுமதி செய்யப்படும் நிலைவரை இந்திய ஏற்றுமதியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா? என்பதை முறையாக ஆய்வு செய்த பின்னர், இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய தடை ஏதுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 50 ஆயிரம் டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டில் உள்நாட்டு மாம்பழ விளைச்சல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த ஆண்டின் அளவையும் கடந்து மாம்பழ ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைக்கும் என தெரிகிறது.