Epic Tamil UberFacts World

தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து

வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது.

சமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை.

இயற்கை மொழிகளின் மூல வடிவம் ஒலியே. வளர வளர வரப்பெற்று மொழிக்கு முழுமை தருவது வரி வடிவமாகும். தமிழுக்கே உரித்தான ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் ‘கிரந்த எழுத்துகள்’ எனப்படுகிறவற்றைக் கொண்டு சிதைக்கும் முயற்சிகள் சில நூற்றாண்டுகள் முன்பே தொடங்கி விட்டன. இந்த முயற்சிகள் கணி உலகிலும் (கணிப்பொறி, கணினி, கணி) பரவி விட்டதுதான் இப்போது புதிய செய்தி. இச்செய்தியைப் புரிந்து கொள்வதற்குச் சில இலக்கண வரையறைகளை (விளக்கங்களை) அறிந்து கொள்ள வேண்டும்.

1) கிரந்த எழுத்துகள்: நமக்கு நன்கு தெரிந்த சில கிரந்த எழுத்துகள் ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவை. ஸ்ரீ ஆகியவை நாமறிந்த கிரந்தக் கூட்டெழுத்துகள். ஆனால், இவை மட்டுமல்ல, கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகளும் 34 மெய் எழுத்துகளும் உள்ளன.

கிரந்தம் ஒரு மொழியன்று. எழுத்து வடிவம் இல்லாத சமற்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரி வடிவமே கிரந்தம். இதன் பிறப்பிடம் வடநாடன்று, தென்னாடே.

சமற்கிருதத்தின் இயல்பான வரி வடிவம் தேவநாகரி எழுத்துமுறையே ஆகும். இந்தி, குசராத்தி, மராத்தி, வங்கம் போன்ற பல வட இந்திய மொழிகளுக்கும் தேவநாகரியே சிற்சில மாறுபாடுகளுடன் எழுத்துமுறையாகப் பயன்படுகிறது – உரோமானிய எழுத்து முறையே ஆங்கிலம், பிரெஞ்சு, இசுப்பானியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வரி வடிவமாகப் பயன்படுவது போல.

ஆனால் தமிழுக்கென்று தனி எழுத்துமுறை உள்ளது. திராவிட மொழிக் குடும்பம் என்று தவறாகப் பெயரிட்டழைக்கப்படும் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி எழுத்து முறைகள் உள்ளன.

மலையாள மொழியானது வடமொழிக் கலப்புக்கு முழுமையாக இடமளிக்கும் பொருட்டு ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துகளைத் தன் நெடுங்கணக்கிலேயே இணைத்துக் கொண்டு விட்டது. தெலுங்கு, கன்னடம் பற்றி நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் மொழிக் கலப்பில் நாட்டம் கொண்டவர்கள் அல்லது அது பற்றிக் கவலைப்படாதவர்களான பல தமிழர்கள் கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுதும் வழக்கம் இருந்தாலும், தமிழ் நெடுங்கணக்கில கிரந்தத்தை நாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிரந்தம் இருந்தாலும் கிரந்தமாகவே இருக்கிறது, கலந்தாலும் கிரந்தரமாகவே கலக்கிறது. இப்போது கணியுலக அளவிலாவது கிரந்தத்தைத் தமிழ்க் கணக்கிலும், தமிழைக் கிரந்தக் கணக்கிலும் சேர்க்க ஒரு முயற்சி நடைபெறுகிறது. இதையே தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து என்கிறோம். எப்படி? இந்தக் கேள்விக்குரிய விடையை விளங்கிக் கொள்ள இன்னுமொரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதுவே ஒருங்குறி.

2) ஒருங்குறி: கணி(னி) வழியாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தோதாக ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறை தேவைப்படுகிறது. இவ்வாறான பல எழுத்துமுறைகளை உள்ளடக்கிய பன்மொழி எழுத்துமுறைதான் ஒருங்குறி எனப்படுகிறது. உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு தனிக் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இக்குறியீடு எல்லா வகைக் கணிகளிலும் ஒன்றாகவே இருக்கும்.

ஒருங்குறியில் கொரிய மொழிக்கு 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும், சீனம் உள்ளிட்ட மொழிக் குடும்பத்துக்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எழுத்துகள் மிகுதியாய் இருப்பதே காரணம். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியம், தேவநாகரி போன்ற எழுத்துமுறைகள் ஒவ்வொன்றுக்கும் 128 குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழியல்லாத எழுத்து முறையாகிய கிரந்தத்துக்கு இதுவரை தனியிடம் தரப்படவில்லை.

ஒருங்குறி தொடர்பான பணிகளைச் செய்வது ஒருங்குறிச் சேர்த்தியம் (வாந ரு—€உழனந ஊழளெழசவரைஅ) என்னும் பன்னாட்டு அமைப்பு. அரசுகள், (மைக்ரோசாப்டு போன்ற) கணிக் குழுமங்கள், பிற நிறுவனங்கள், தனியாட்கள் இதில் உறுப்பு வகிக்கலாம். தமிழக அரசு முன்பு இதில் உறுப்பினராயிருந்து, பிறகு உறுப்புக் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து இதில் உறுப்பாய் இருந்து வருகிறது.

ஒருங்குறிக் கட்டமைப்பு என்பது பல்வேறு தளங்களால் ஆனது: (1) அடிப்படைப் பன்மொழித் தளத்தில் (Basic Multilingual Plane- BMP) தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் இப்போது வழக்கில் இருக்கும் எல்லா மொழிகளும் அவற்றுக்குரிய எழுபதுக்கு மேற்பட்ட எழுத்துமுறைகளும் இத்தளத்தில்தான் உள்ளன. இவை தவிர அதிகமாகப் பயன்படும் எண்-குறிகள், கணிதக் குறிகள், சின்னங்கள், மீக்குறிகள் போன்றவையும் இதில் இடம் பெறுகின்றன. (2) துணைப் பன்மொழித் தளத்தில் (Supplementary Multingual Plane – SMP) வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக் குறிகளும், அரிதாகப் பயன்படும் எழுத்துக் குறிகளும், இசைக் குறிகளும், சிற்சில சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. இது வரலாற்று நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தளமாகும். துணைப் பன்மொழித் தளத்தோடு கூட துணைப் படமொழித் தளமும் (Supplementary Ideographic Plane) உள்ளது. தளங்கள் 3 முதல் 13 வரையிலானவை எதிர்காலப் பயன் பாட்டுக்குரியவை. தளம் 14 சிறப்புக் குறிகளுக்கானது. 15,16 ஆகிய தளங்கள் தனியார் பயன்பாட்டுக்குரியவை.

எல்லாத் தளங்களிலும் சேர்த்து மொத்தம் 11 இலக்கத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சொந்தப் பயன்பாட்டுக்குரியவை 1,13,000 ஆகும்.

ஒருங்குறிச் சேர்த்தியம் 1991ஆம் ஆண்டு தன் பணிகளைத் தொடங்கிய போதிலும், ஒருங்குறியைப் பயன்படுத்துவது 2000ஆம் ஆண்டுதான் தொடங்கியது.

ஒருங்குறி தோன்றிய போதே ஜ, ஸ, ஷ, ஹ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்து வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டன. ஒருங்குறிச் சேர்த்தியம் யாரைக் கேட்டுக்கொண்டு இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. இந்த கிரந்த எழுத்துகளைத் தமிழர்கள் பரவலாகப் புழங்குவது தெரிந்ததே, பள்ளிக் குழந்தைகளுக்கான பாட நூல்களிலும் இந்த எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்துகளை ஏற்றுக் கொள்ளத் தமிழக அரசின் அரசாணையே உள்ளதாம்.

கிரந்தம் கலந்த தமிழ் எழுத்துமுறை சமற்கிருத, ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதுவதற்கு (எ-டு: ஜெயம், ஜூனியர்) உதவியாகவும் ஊக்கமாகவும் அமைந்து விட்டது. கிரந்தம் தேவைப்படாத பெயர்களைக் கூட கிரந்தம் கலந்து எழுதுவதைப் பார்க்கிறோம் (சஞ்சய் இவ்விதம் ‘சஞ்ஜய்’ ஆகி விடுகிறார். சங்கர் ‘ஷங்கர்’ ஆகிறார்). இதை விடவும் பெருங்கொடுமை தூய தமிழ்ச் சொற்களை எழுதுவதற்கே கூட கிரந்தத்தைப் பயன்படுத்துவதாகும். மதுக்கடை ஒன்றின் பெயர்ப் பலகை ‘குறிஞ்ஜி வொய்ன்ஸ்’ பருக அழைக்கிறது.

குறிஞ்சி கிரந்த போதையால் ‘குறிஞ்ஜி’ ஆகித் தள்ளாடக் காண்கின்றோம். மஞ்சள் வணிகத்தில் மார்வாடிகள் – குசராத்தி சேட்டுகள் நுழைந்திருப்பது போல் மஞ்சளில் கிரந்தம் நுழைந்து ‘மஞ்ஜள்’ ஆனாலும் அஞ்சற்க (‘அஞ்ஜற்க’வோ)! கிரந்தமும் ஆங்கிலமும் சேர்ந்து தமிழை விலக்கி வைப்பதற்குச் சான்றாக, காவல்காரன் படத்துக்கு இரசிகர்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டி ‘இளைய தளபதி விஜய்’ என்று கொண்டாடுகிறது.

ஒருங்குறியில் நாமறிந்த ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவற்றோடு ஐந்தாவதாக நாம் இது வரை அறியாத ஒரு கிரந்த எழுத்தும் சேர்ந்து விட்டது. இந்த ஐந்தும் தமிழ் எழுத்துகளாகவே குறியிடப்பட்டிருப்பது பெருங்கொடுமை! இதற்கான முன்மொழிவை ‘உத்தமம்’ என்ற அமைப்பு அனுப்பியதாம்! அமெரிக்காவில் வாழும் தமிழர் – கணிஞர் நா.கணேசன் இதற்குத் தூண்டுதலாம்! இந்தக் கொடுமையை ஒருங்குறியைப் பாரத்துத்தான் தமிழறிஞர்களே தெரிந்து கொண்டார்களாம்! ஆனால் இணையத்தில் இந்த எழுத்தை இருவர் மட்டுமே பயன்படுத்தி வருவது ஆறுதலான செய்தி. இந்த இருவரில் ஒருவர் நா.கணேசன்!

உத்தமமும் நா.கணேசனும் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பினர்கள். இன்னோர் உறுப்பினர் தமிழ்நாட்டில் இருக்கும் சிறிரமணசர்மா. இவர் கொடுத்த முன்மொழிவு: 26 கிரந்தக் குறிகளை ஒருங்குறிக்குள் கொண்டு வந்து, அதனைத் ‘தமிழ் நீட்சி’ என அழைப்பதாகும். தமிழை இப்படி நீட்டினால்தான் சமற்கிருதம், சௌராட்டிரம் ஆகிய மொழிகளைத் தமிழ் வரி வடிவத்தில் எழுத முடியும் என்பது ரமணசர்மாவின் வாதம்.

சிறிரமணசர்மா 2010 சூலை 10ஆம் நாள் ‘தமிழ் நீட்சி’ முன்மொழிவைத் தந்தார். அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் கடைசி நாள் 25.10.2010. ‘தமிழ் நீட்சி’ முன்மொழிவையும் அதனால் எழக் கூடிய தீமைகளையும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வக்குமாரும் மற்றச் சிலரும் உலகறியச் செய்தார்கள். அதற்குள் அக்டோபர் திங்கள் பிற்பகுதியாகி விட்டது. பதறியெழுந்த தமிழறிஞர்கள் அவசரமாகத் தங்கள் மறுப்புக் கருத்துகளை ஒருங்குறிச் சேர்த்தியத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஒருங்குறி அறிஞர்களான மலேசியாவைச் சேர்ந்த திரு முத்து நெடுமாறனும், தமிழகத்தைச் சேர்ந்த திரு மணி மு.மணிவண்ணனும் நுணுக்கமான முறையில் ரமணசர்மாவின் முன்மொழிவை நொறுக்கி விட்டார்கள்.

எப்படியோ ஒரு வழியாக ஒருங்குறிச் சேர்த்தியம் ரமணசர்மாவின் ‘தமிழ் நீட்சி’யை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரேயடியாக மறுத்து விட்டதா என்று இனிதான் தெரிய வேண்டும்.

சிறிரமணசர்மாவின் மற்றொரு முன்மொழிவு 68 கிரந்தக் குறிகளுக்கும் ஒருங்குறியில் தனி ஒதுக்கீடு கேட்பதாகும். இது தமிழுக்குள் கிரந்தத்தையோ கிரந்தத்துக்குள் தமிழையோ நுழைப்பதாக இல்லாத வரை நம் கவலைக்குரியதன்று. இந்த முன்மொழிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டதற்குக் காரணம் நா.கணேசனின் மற்றுமொரு முன்மொழிவாகும். 68 கிரந்தக் குறிகளோடு சேர்த்து எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்தையும், எகர உயிர்மெய்க் குறி (—), ஒகர உயிர்மெய்க் குறி (— – ‘) ஆகிய இரண்டையும் சேர்த்து ஏழு தமிழ்க் குறிகளைக் கிரந்தத்துக்குள் சேர்த்து, 75 குறிகளைக் கொண்ட தமிழ் – கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்குவதே அந்த முன்மொழிவு. ரமணசர்மா தனது தனிக் கிரந்த ஒதுக்கீட்டை துணைப் பன்மொழித் தளத்தில் கேட்டார் என்றால், இளங்கோவனோ அடிப்படைப் பன்மொழித் தளத்தில் தனது கலவைக் குறியீட்டுக்கு இடம் கேட்டார்.

கிரந்த சேவையில் ரமணசர்மாவுக்கும் நா.கணேசனுக்கும் நிகழ்ந்த போட்டா போட்டியால் முடிவெடுக்கத் திணறிய ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய அரசின் உதவியை நாடியது. இந்திய அரசு தமிழக அரசையோ தமிழறிஞர்களையோ கலந்து கொள்ளாமலே தனது முன்மொழிவை அனுப்பியது. நா.கணேசன் கேட்ட 75 குறிகளுடன் வேறு சிலவற்றையும் சேர்த்து மொத்தம் 89 குறிகள் கொண்ட தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு வேண்டும் என்பது தில்லியின் முன்மொழிவு. இந்தக் கலப்படக் குறியீட்டை இந்திய மொழிகள் அனைத்துக்குமான பொது எழுத்து முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது அதன் ஆசைக் கனவு.

இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க 2010 நவம்பர் மாதம் ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த நிலையில்தான் தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் சீறிக் கிளம்பினர். முனைவர் இராம.கி., பேராசிரியர் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணியைச் சந்தித்து சிக்கலைச் எடுத்துரைக்க, அவர் தமிழக அரசை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தார். தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தி முடிவைத் தள்ளிவைக்கச் செய்துள்ளது. 2011 பிப்ரவரி 7 வரை தமிழ்க் கட்சிக்கு அவகாசம் கிடைத்துள்ளது. தமிழக அரசு ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. வேறு எதற்கும் இல்லா விட்டாலும் சிக்கலைக் கிடப்பிலிட விசாரணைக்குழு பயன்படும் என்பது பட்டறிவு.

இம்முறை தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்களும், தமிழ் அமைப்புகளும் விழித்துக் கொண்டு விறுவிறுப்பாகச் செயல்படுவது நல்ல செய்தி. தாளாண்மை உழவர் இயக்கம் 2011 சனவரி 9ஆம் நாள் தஞ்சையில் கருத்தரங்கமும் பொதுக்கூட்டமும் நடத்தித் தமிழ் எழுத்துச் சிதைப்புக்கு எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியுள்ளது. ‘ஒருங்குறித் தமிழ் – மெய்யும் மீட்பும்’ என்ற அறிவூட்டும் கட்டுரைத் தொகுப்பையும் அது வெளியிட்டுள்ளது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் மக்கள் தொலைக்காட்சி சங்கப் பலகையில் ஒருங்குறி தொடர்பாக இலக்குவனார் திருவள்ளுவன், நாக.இளங்கோவன், இராம.கி. ஆகியோருடன் உரையாடல்கள் இடம்பெற்றன. நீதிமன்றத்தை அணுகும் திட்டமும் உள்ளது. பல்வேறு முனைகளிலும் தமிழ் காக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

ஆனால் விடைகாண வேண்டிய உயிர்க் கேள்வி ஒன்று உள்ளது: தமிழுக்கு இப்படித் திடுமென ஆபத்துகள் கிளம்புவது ஏன்? ஏழுகோடித் தமிழ் மக்கள் பேசும் மொழியின் எழுத்துமுறையில் கிரந்தக் கலப்படம் செய்ய யாரோ ஒரு சர்மாவும் யாரோ ஒரு கணேசனும் முன்மொழிவதும், அதை மறுத்துத் தமிழ் அறிஞர்கள் மெனக்கெட்டு வாதிட்டுக் கொண்டிருப்பதும், அரசே இதற்கு ஒரு குழு அமைப்பதும்… இது என்ன கூத்து? ஒருங்குறியில் தமிழ் எழுத்துமுறைக்கு யார் பொறுப்பு? ஒருங்குறிச் சேர்த்தியம் என்ற பன்னாட்டு அமைப்பு தமிழ் எழுத்துமுறையில் சேர்க்கைகள் செய்ய முன்மொழிவுகள் வந்தால் அதைத் தமிழக அரசுக்கும், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும், செம்மொழி ஆய்வு மையத்திற்கும் தெரிவித்துக் கருத்துக் கேட்க வேண்டாமா? இந்திய அரசும் சேர்த்தியத்தின் முன்மொழிவுக்கு விடை தருமுன் தமிழக அரசைக் கேட்கத் தேவையில்லையா? தமிழின் ஒலி, வரி வடிவங்களைக் காக்கவும், மாற்றம் செய்ய வேண்டுமென்றால் உரியவாறு அதைச் செய்யவும் தமிழ்ப் புலவர் குழு, தமிழ்ப் பேரவை போன்ற நிலையான அமைப்புகள் தேவையில்லையா?

உலகில் தமிழனைப் போலவே அவன் பேசும் மொழியும் நாதியற்றுப் போய் விட்டதே! தமிழ்க் காப்பு, தமிழ் மீட்பு என்பது மொழித் தளத்தில் மட்டும் நிறைவேறக் கூடியதன்று. தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்தை வெல்வதோடு, வருமுன் காக்கும் சிந்தனையும் நமக்குத் தேவை.

 

நன்றி: சமூகநீதித் தமிழ்த் தேசம் | Koodal.com