இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.
ஆங்கிலேயரின் ஆட்சி
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைதல்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!