Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஜி.எஸ்.டி. வரி மசோதா: டெக் சாதனங்களின் விலையும் அதிகரிக்கும்

புதுடெல்லி:

 

 

ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது.
ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நடைமுறைக்கு வந்த பின் பல்வேறு பொருட்களின் விலையில் அதகிகளவு மாற்றங்கள் ஏற்படும். அந்தவகையில் இம்முறை விதிக்கப்பட்டுள்ள வரி மாற்றங்கள் நாம் விரும்பி பயன்படுத்தி வரும் டெக் சாதனங்களின் விலையை வெகுவாக பாதிக்கும்.
அந்த வகையில், புதிய ஜி.எஸ்.டி வரி சட்டம் நடைமுறைக்கு வந்ததும், எந்தெந்த டெக் சாதனங்களின் விலை எவ்வாறு மாற்றப்பட உள்ளது என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,
* மொபைல் போன்:
பெரும்பாலான மொபைல் போன்கள் 4 முதல் 5 சதவிகிதம் விலை அதிகமாகலாம். மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்புகள் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களின் விலை குறைவாகும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்களின் விலை அதிகமாகும்.
சமீபத்திய ஆய்வு முடிவுகளின்படி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 5.9 கோடி மொபைல் போன்களில் 80 சதவிகிதம் போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.
* லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்கள்:
லேப்டாப்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், லேப்டாப்களின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. லேப்டாப்களை போன்றே டெஸ்க்டாப் கணினிகளுக்கும் 18 சதவிகிதம் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலையும் அதிகரிக்க உள்ளது.
* தொலைகாட்சி பெட்டிகள் (டி.வி.):
பெரிய மற்றும் சிறிய ரக நுகர்வோர் மின்சாதனங்களுக்கு 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை தற்போது இருப்பதை விட 4 முதல் 5 சதவிகிதம் வரை அதிகரிக்கும். தற்சமயம் இவற்றுக்கான வரி 12.5 முதல் 14.5 சதவிகிதமாகவும், ஒவ்வொரு மாநிலத்தை பொருத்து சுமார் 8.6 சதவிகிதம் வரை சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
* மானிட்டர் மற்றும் பிரின்ட்டர்கள்:
கம்ப்யூட்டர் சாதனத்தின் அங்கங்களான மானிட்டர் மற்றும் பிரின்ட்டர்களின் விலை அதிகமாகிறது. இவற்றுக்கான வரி 28 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* டிஜிட்டல் கேமராக்கள்:
ஜி.எஸ்.டி. சேவை வரி மாற்றங்களின் படி பெரிய மற்றும் சிறிய சாதனங்களுக்கு 28 சதவிகிதம் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் கேமரா, காம்கார்டர்கள் உள்ளிட்டவற்றின் விலை 4 முதல் 5 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது.
இதேபோல் ஜி.எஸ்.டி சேவை வரி சட்டம் நடைமுறைக்கு வந்த பின் மொபைல் போன் கட்டணங்களும் அதிகரிக்க உள்ளது. அதன்படி மொபைல் போன் கட்டணங்களில் ரூ.1000 செலுத்தும் போது 30 ரூபாய் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி மசோதா ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்க வரவுள்ளது. இதனால் மேற்கண்ட கட்டண மாற்றங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Exit mobile version